ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம், 2025-ல் புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின் படி, நாடு முழுவதும் 558,191 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. இது 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 10.7% அதிகமாகும்.
இந்த வளர்ச்சியானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் விரிவடைந்து வரும் மக்கள்தொகை, வலுவான பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டவர்களைத் தொடர்ந்து ஈர்க்கும் தன்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
குறிப்பாக, புதிய உரிமங்களில் பெரும்பாலானவை ஆண் ஓட்டுநர்களுடையவை என்று கூறப்படுகிறது.
- ஆண்கள்: 443,988 உரிமங்கள் (12% அதிகரிப்பு)
- பெண்கள்: 114,203 உரிமங்கள் (5.7% அதிகரிப்பு)
அனைத்து புதிய உரிமங்களிலும் 79.5% ஆண்களுடையவை, அதே நேரத்தில் 20.5% பெண்களுடையவை. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 6,100-க்கும் மேற்பட்ட புதிய பெண் ஓட்டுநர்களைச் சேர்த்துள்ளது. மொத்தத்தில், 2024-ஐ விட 2025-இல் கூடுதலாக 53,814 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேவைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு மேம்பாடு
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான புதிய ஓட்டுநர்கள் சாலைகளில் இணைவதால், வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய போக்குவரத்துத் திட்டங்களை விரைவுபடுத்தி வருகிறது.
கூட்டாட்சி அளவில், அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட முக்கிய எமிரேட்களை இணைக்கும் 6 பில்லியன் திர்ஹம் மதிப்பிலான நான்காவது கூட்டாட்சி வழித்தடத்தை அமீரக அரசு உருவாக்கி வருகிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 120 கி.மீ நீளமுள்ள, 12 வழித்தடங்களைக் கொண்ட இந்தச் சாலை, தினமும் 360,000 பயணங்கள் வரை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் 2027-ஆம் ஆண்டு வரை 72 திட்டங்களில் பணியாற்றி வருகிறது. இதன் மூலம் 226 கி.மீ சாலைகள், 115 பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் புதிதாக அமைக்கப்படுகின்றன.
சாலை உள்கட்டமைப்பு மேம்பாடுகளைப் போலவே, அமீரகத்தில் பொதுப் போக்குவரத்தும் வேகமாக விரிவடைந்து வருகிறது. இதில், 2029-ல் திறக்கப்படவுள்ள, 14 நிலையங்களுடன் 30 கி.மீ. நீளமுள்ள துபாய் மெட்ரோ நீல வழித்தடமும் அடங்கும்.
அதுமட்டுமில்லாமல், 2032-க்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் துபாய் மெட்ரோ தங்க வழித்தடத்திற்கான (Dubai Metro Gold Line) திட்டங்களும் உள்ளன.
இந்த வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் ஒன்றாக, அதிகரித்து வரும் உரிமங்களின் எண்ணிக்கையும், முக்கிய உள்கட்டமைப்பு முதலீடுகளும், நாடு முழுவதும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதோடு, விரைவான நகர்ப்புற மற்றும் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து முன்னணியில் இருப்பதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முயற்சியை எடுத்துக்காட்டுகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel