ஷார்ஜாவில் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட ஒரு முக்கிய வளர்ச்சித் திட்டமான புதிய ‘கோர்ஃபக்கான் ஓய்வு விடுதி’யை (Khorfakkan Resort), சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல்-காசிமி வியாழக்கிழமையன்று திறந்து வைத்துள்ளார்.
கோர்ஃபக்கான் எனும் கிழக்கு நகரத்தில் சுற்றுலா மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தின் திறப்பு விழா, ஷார்ஜாவின் துணை ஆட்சியாளரான அப்துல்லா பின் சலேம் அல் காசிமி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
ஷார்ஜா இஸ்லாமிய வங்கியின் (Sharjah Islamic Bank) ரியல் எஸ்டேட் பிரிவான ‘அசாஸ் ரியல் எஸ்டேட்’ (Asas Real Estate) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இத்திட்டம், சுமார் 700 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ரிசார்ட்டின் சிறப்பம்சங்கள்
இந்த ஓய்வு விடுதி சுமார் 330,000 சதுர அடி பரப்பளவில் வஅமைந்துள்ளதோடு, 1.4 மில்லியன் சதுர அடி அளவிலான கட்டுமானப் பரப்பளவையும் கொண்டுள்ளது.
பிரபலமான கோர்ஃபக்கான் அரங்கம் (Amphitheatre) மற்றும் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள கோர்ஃபக்கான் கடற்கரையிலேயே நேரடியாக அமைந்துள்ள இத்திட்டம், கடல், மலைகள், கடற்கரை மற்றும் நகரத்தின் வானளாவிய காட்சிகளைப் பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது.
கூடுதலாக, இந்த ஓய்வு விடுதியில் பின்வருவன அடங்கும்:
- 573 குடியிருப்பு யூனிட்கள்
- ஒன்று முதல் நான்கு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்புகள் (Apartments)
- 16 சில்லறை விற்பனைக் கடைகள்
- இரண்டு அடுக்கு பார்க்கிங் இடங்கள்
- ஒன்பது குடியிருப்புத் தளங்கள்
இத்திட்டம், குடியிருப்பு வாழ்க்கையோடு சேர்த்து, நட்சத்திர விடுதி பாணியிலான சேவைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான ஆடம்பர வசதிகள்
இந்த ஓய்வு விடுதியில் உள்ள வசதிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
- வெளிப்புற நீச்சல் குளங்கள்
- உடற்பயிற்சி கூடம் (Gymnasium)
- 100,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட உயரமான பசுமைப் பகுதிகள்
- குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள்
- தனியார் கடற்கரைக்கான நேரடி அணுகல் வசதி
- ஒருங்கிணைந்த விருந்தோம்பல் சேவைகள்
அனைத்து நாட்டினருக்கும் முழு உரிமை (Freehold) வசதி
இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, இது அனைத்து நாட்டினருக்கும் ‘முழு உரிமை’ (Freehold ownership) வசதியை வழங்குகிறது என்பதாகும். இது உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் இத்திட்டத்தின் ஈர்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
ஷார்ஜாவின் நீண்டகால நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு இணங்கச் செயல்படும் அதே வேளையில், கோர்ஃபக்கான் நகரின் சுற்றுலா வளர்ச்சிக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இந்த ஓய்வு விடுதி உறுதுணையாக இருக்கும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel