ஈரானுடன் தொடர்புடைய பிராந்திய பதட்டங்கள் மற்றும் பொருளாதார சீர்குலைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரக மத்திய வங்கியால் தொடங்கப்பட்ட ஒரு பெரிய நிதி நிவாரணத் திட்டத்தால், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 65,300-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களும் நிறுவனங்களும் பயனடைந்துள்ளதாக சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
அமீரகத்தின் மத்திய வங்கி (CBUAE) வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, சுமார் 6.2 பில்லியன் திர்ஹம் மதிப்பிலான இந்த ஆதரவுத் திட்டத்தின் மூலம் மொத்தமாக 60,559 தனிநபர்கள், 4,335 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மற்றும் 485 பெருநிறுவனங்கள் பயனடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட பிராந்திய மோதலைத் தொடர்ந்து, மார்ச் 18 அன்று அமீரகத்தில் இந்த நிதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நெருக்கடியின் போது வாடிக்கையாளர்கள் நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதோடு, ஐக்கிய அரபு அமீரகத்தின் வங்கித் துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில், தகுதியுள்ள வங்கி வாடிக்கையாளர்கள் பின்வரும் நிவாரணங்களை பெற்றனர்:
- ஆறு மாதங்கள் வரை கடன் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்தல்
- வட்டி மற்றும் கட்டணத் தள்ளுபடிகள்
- முன்னுரிமைத் துறைகளுக்கு நிதியுதவி தொடர்ந்து கிடைக்கும் வசதி
அதுமட்டுமில்லாமல், தகுதி பெறுவதற்கு குறைந்தபட்ச கடன் தேவை எதுவும் இல்லை என்று மத்திய வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டான காலகட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் உள்ள வணிகங்களுக்கு முன்னுரிமை ஆதரவு வழங்கப்பட்டது, அவற்றுள் அடங்குபவை:
- போக்குவரத்துத் துறை: 361 நிறுவனங்கள்
- விருந்தோம்பல் துறை: 173 நிறுவனங்கள்
- பொழுதுபோக்குத் துறை: 134 நிறுவனங்கள்
அமீரகத்தின் பல முக்கிய வங்கிகள் அறிமுகப்படுத்திய சிறப்பு நிவாரணத் திட்டங்கள்:
துபாய் இஸ்லாமிக் வங்கி (Dubai Islamic Bank) ஏறக்குறைய 25,000 வாடிக்கையாளர்களுக்குப் பின்வரும் உதவிகளை வழங்கியது:
- மூன்று மாதங்கள் வரையிலான தவணைத் தொகை ஒத்திவைப்புகள்
- கட்டண விலக்குகள்
- கட்டணமில்லா பள்ளி கல்விக் கட்டணச் செலுத்தும் திட்டங்கள்
அபுதாபி இஸ்லாமிக் வங்கி (Abu Dhabi Islamic Bank) தனது “Sanadna” எனும் முன்னெடுப்பைத் தொடங்கி, பின்வருவனவற்றை வழங்கியது:
- சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SME) தவணை ஒத்திவைப்புகள்
- POS சேவைகளுக்கான கட்டணச் சலுகைகள்
- முன்களப் பணியாளர்களுக்கான நிதி உதவிகள்
அதேபோல், ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி (First Abu Dhabi Bank) பின்வருவனவற்றை அறிமுகப்படுத்தியது:
- நெகிழ்வான கட்டணத் திட்டங்கள்
- கடன் தவணை ஒத்திவைப்புகள்
- முன்னுரிமை அடிப்படையிலான கடன் வட்டி விகிதங்கள் மற்றும் பணத் திரும்பப் பெறும் (Cashback) சலுகைகள்
மேலும், அஜ்மான் வங்கி (Ajman Bank) தனது “Talahom” முன்னெடுப்பின் கீழ், மூன்று மாதங்கள் வரையிலான தவணை ஒத்திவைப்புக் கட்டணங்களை ரத்து செய்தது.
இவற்றுடன் எமிரேட்ஸ் NBD வங்கி (Emirates NBD) அதன் வாடிக்கையாளர்களுக்கு பின்வருவனவற்றையும் வழங்கியது:
- வட்டி இல்லாத இருப்பு மாற்ற (Balance Transfer) வசதிகள்
- தவணைத் திட்டங்களுக்கான கட்டண விலக்குகள்
- ஜூன் 30, 2026 வரை இலவசக் கடன் தவணை ஒத்திவைப்புகள்
இவ்வாறு நிச்சயமற்ற சூழல்கள் நிலவிய காலத்தில், குடியிருப்பாளர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் ஆதரவளிப்பதோடு, நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்தவும் வங்கிகளால் வழங்கப்பட்ட இந்த ‘மீள்திறன் தொகுப்புத் திட்டம்’ (Resilience Package) உதவியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel