பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள், இன்று (மே 10, 2026, ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் எந்தக் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மாத காலமாக நடைமுறையில் உள்ள ஒரு போர் நிறுத்தத்தை மீறி, ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக அமீரகம் இது போன்ற தாக்குதல்களை மீண்டும் இடைமறித்து வருகின்றது.
இதனை தொடர்ந்து ஈரானியத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம் 551 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 29 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2,265 ட்ரோன்களை எதிர்கொண்டுள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13 ஆகும். இதில் இரண்டு ஆயுதப் படை உறுப்பினர்கள், ஆயுதப் படைகளுடன் பணியாற்றிய ஒரு மொராக்கோ சிவில் ஒப்பந்தக்காரர் மற்றும் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், பாலஸ்தீனம், இந்தியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.