ADVERTISEMENT

துபாய் விமான நிலையத்தில் 30,000 யூரோக்களுடன் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஜாக்கெட்.. கடந்த ஆண்டில் அமீரகத்தில் தொலைந்துபோன பொருட்களின் புள்ளிவிபரம் வெளியீடு..!!

Published: 13 May 2026, 1:11 PM |
Updated: 13 May 2026, 1:13 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, கடந்த ஆண்டு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பதிவான மிகவும் குறிப்பிடத்தக்க ‘தொலைந்த மற்றும் கண்டெடுக்கப்பட்ட’ (lost-and-found) நிகழ்வுகளில் ஒன்றாக, 30,570 யூரோ (சுமார் 121,974 திர்ஹம்ஸ்) ரொக்கப்பணத்துடன் கண்டெடுக்கப்பட்ட ஒரு கருப்பு ஜாக்கெட் வழக்கு இருந்தது.

ADVERTISEMENT

டிசம்பர் 31, 2025 அன்று மாலை 5:56 மணியளவில், 39 வயதான ஒரு மேற்பார்வையாளர் அந்த ஜாக்கெட்டைக் கண்டெடுத்துத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, புத்தாண்டு (New Year’s Eve) அன்று அந்த ஜாக்கெட் விமான நிலையக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ரொக்கப்பணத்துடன் சேர்த்து, ஜாக்கெட்டில் சில்லறை நாணயங்களும் பல இருந்துள்ளன. இதையடுத்து, அதிகாரப்பூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பதிவுகள் செய்யப்பட்ட போதிலும், அந்தப் பொருளை உரிமை கோரி அதன் உரிமையாளர் யாரும் முன்வராத நிலையில், அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போல 2025-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கையாளப்பட்ட பல்லாயிரக்கணக்கான ‘தொலைந்த மற்றும் கண்டெடுக்கப்பட்ட’ புகார்களில் இந்தச் சம்பவமும் ஒன்றாகும்.

ADVERTISEMENT

அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, அந்த ஆண்டு முழுவதும் அதிகாரிகள் 22,467 தொலைந்த பொருட்கள் குறித்த புகார்களையும், 36,403 கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்த புகார்களையும் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, தொலைந்த பொருட்களின் பட்டியலில் அடையாள அட்டைகளே (Identity cards) முதலிடத்தில் இருந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது தொலைக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான மொத்த வழக்குகளில் 21,076 அறிக்கைகள் அடையாள அட்டைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன, இது தவறவிடப்பட்ட பொருட்கள் தொடர்பான மொத்த வழக்குகளில் கிட்டத்தட்ட 94 சதவீதம் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், பாஸ்போர்ட்கள் (Passports) 1,126 புகார்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. அதைத் தொடர்ந்து, கைபேசிகள் மற்றும் வாகனப் பதிவு எண்கள் (licence plates) தலா 19 புகார்களுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. அதுமட்டுமில்லாமல், 11 லேப்டாப்கள் தொலைந்த வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மறுபுறம், கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் பட்டியலில் ரொக்கப்பணமே முதலிடத்தில் இருந்தது. கண்டெடுக்கப்பட்ட பணத்தை ஒரே வகையின் கீழ் தொகுத்து அதிகாரிகள் 3,363 புகார்களைப் பதிவு செய்திருந்தாலும், பணம் தொடர்பான அனைத்துப் பதிவுகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, ​​மொத்தம் 8,726 புகார்கள் பதிவாகியுள்ளன.

அதேபோல், பர்ஸ் அல்லது வாலட்கள் (Wallets) சுமார் 1,208 புகார்களுடன் அடுத்த இடத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து தனிப்பட்ட அடையாள அட்டைகள் 1,168 புகார்களுடனும், குடியிருப்பு அடையாள அட்டைகள் (Residence IDs) 724 புகார்களுடனும், மோதிரங்கள் 666 புகார்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

நாடு முழுவதும் பதிவான கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான புகார்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் துபாய் நகரமே கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, நாடு முழுவதும் பதிவான மொத்தம் 36,403 வழக்குகளில், 36,076 வழக்குகள் துபாயில் மட்டுமே பதிவாகியுள்ளன.

இந்த வழக்குகளில் 34,845 வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய மையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் பரபரப்பான குளிர்காலப் பயண மற்றும் சுற்றுலாப் பருவத்துடன் ஒத்துப்போகும் வகையில், டிசம்பர் மாதம் அதிகபட்ச எண்ணிக்கையிலான அறிக்கைகளைப் பதிவு செய்ததகக் கூறப்படுகிறது. இதில் 2,806 தொலைந்த பொருட்கள் தொடர்பான வழக்குகளும், 3,680 கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்த அறிக்கைகளும் அடங்கும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel