ADVERTISEMENT

சென்னை – அபுதாபி புறப்பட்ட விமானத்தில் தீ விபத்தா? சம்பவம் குறித்து விளக்கமளித்த எதிஹாட் ஏர்வேஸ்!!

Published: 13 May 2026, 8:40 AM |
Updated: 13 May 2026, 8:40 AM |
Posted By: Menaka

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்ட தனது விமானங்களில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில் இதற்கு எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில் இந்த தீ விபத்து சம்பவம் குறித்து எதிஹாட் ஏர்வேஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், விமானம் புறப்படுவதற்கு முன்பு தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே ஏற்பட்டதாக நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியைத் தளமாகக் கொண்ட இந்த விமான நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சையத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற EY343 விமானம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 12 அன்று புறப்படுவதற்கு முன்பு நுழைவாயிலுக்கே மீண்டும் திரும்பியதை உறுதிப்படுத்தியது.

மேலும், பிரச்சனை கண்டறியப்பட்ட பிறகு பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாக அந்த விமான நிறுவனம் கூறியது.

ADVERTISEMENT

“மே 12 அன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து (MAA) சையத் சர்வதேச விமான நிலையத்திற்கு (AUH) சென்ற எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY343, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படுவதற்கு முன்பு நுழைவாயிலுக்கே திரும்பியது, அதைத் தொடர்ந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்,” என்று அந்த விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை விமான நிலைய பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்க அவசரகால சேவைகள் செயல்படுத்தப்பட்டதாகவும் விமான நிறுவனத்தின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுவே, இணையத்தில் இது ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் மற்றும் வதந்திகளை கிளப்பியுள்ளன என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இதற்கிடையில், தொழில்நுட்பக் குழுக்கள் நிலைமையைக் கையாண்டதால், விமானம் திட்டமிடப்பட்ட நேரத்தை விட தாமதமாகப் புறப்பட்டது. மேலும், ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியதுடன், அதன் ஊழியர்கள் பயணிகளின் அடுத்த பயணங்களுக்கு உதவி வருவதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel