துபாயில் உள்ள அல் யலாயிஸ் ஸ்ட்ரீட்டில் (Al Yalayis Street) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலை நடுவே நிறுத்தப்பட்டிருந்த தொழிலாளர் பேருந்து மீது லாரி மோதியதில், ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மற்றும் 19 பேர் காயமடைந்தனர் என துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவம், ஷேக் சையத் பின் ஹம்தான் பாலத்திற்கு அருகில் எமிரேட்ஸ் சாலையை நோக்கிச் செல்லும் வழியில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையின்படி, கோளாறு காரணமாக பேருந்து திடீரென சாலையில் நின்றபோது, பின்னால் வந்த லாரி பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறி அதன் மீது மோதியது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், எட்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இருவர் மிதமான காயங்களுடனும், ஒன்பது பேர் சிறு காயங்களுடனும் உயிர் பிழைத்துள்ளனர். உடனடியாக, காயமடைந்த அனைத்துப் பயணிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்துக் காவலர்கள், மீட்புக் குழுவினர் மற்றும் விபத்து புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதியைப் பாதுகாக்கவும், போக்குவரத்தைத் திசை திருப்பவும், மீட்புப் பணிகளின்போது அவசரகாலக் குழுவினருக்கு உதவவும் செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சாலைகளின் நடுவில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து துபாய் காவல்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால், திடீர் பழுதுகள் விரைவாக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பொதுப் போக்குவரத்துத் துறையின் இயக்குநரான பிரிகேடியர் ஜுமா சலேம் பின் சுவைதான் பேசுகையில், வாகன ஓட்டிகள் பயணம் செய்வதற்கு முன்பு தங்கள் வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், ஒரு வாகனத்தைச் சாலையிலிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த முடியாவிட்டால், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்துவது ஒரு கடுமையான போக்குவரத்து விதிமீறலாகக் கருதப்படுகிறது என்றும், அதற்கு 1,000 திர்ஹம் அபராதமும் ஆறு கருப்புப் புள்ளிகளும் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டினர். அதேபோல், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதும் கூடுதல் தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பழுது அல்லது விபத்துகளை எதிர்கொள்ளும் ஓட்டுநர்கள், அபாய விளக்குகளை (hazard lights) எரியவிடவும், முடிந்தால் வாகனங்களுக்குப் பின்னால் எச்சரிக்கை முக்கோணங்களை (warning triangles) வைக்கவும், பயணிகளைப் போக்குவரத்து நெரிசலிலிருந்து விலகிப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவும், அதிகாரிகளிடமிருந்து உடனடி உதவியை நாடவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel