துபாயின் அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகமானது (GDRFA Dubai), 2021-ஆம் ஆண்டு முதல், திறமையான ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் சுமார் 167,000-க்கும் மேற்பட்ட கோல்டன் விசாக்களை வழங்கியுள்ளது. இது குடும்ப நிலைத்தன்மை, நீண்ட கால வசிப்பு மற்றும் உலகளாவிய திறமையாளர்களை ஈர்ப்பதில் அமீரகத்தின் அதிகரித்து வரும் கவனத்தை எடுத்துக்காட்டுகிறது.
மே 15ம் தேதி அன்று கொண்டாடப்பட்ட சர்வதேச குடும்பங்கள் தினத்தை முன்னிட்டு GDRFA துபாய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த புள்ளிவிவரங்கள் 2021 முதல் 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், குடியேறுவதற்கும் உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக துபாய் தனது நிலையை வலுப்படுத்துவதும், துபாயில் குடிபெயரும் குடும்பங்களின் நிலையான வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது.
2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா, தகுதியுள்ள குடியிருப்பாளர்களை ஒரு ஸ்பான்சர் அல்லது முதலாளியின் தேவையின்றி நாட்டில் வாழவும், வேலை செய்யவும், படிக்கவும் அனுமதிக்கிறது. இது முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறந்த மாணவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு வழங்கப்படுகிறது.
சமீபத்திய புள்ளிவிபரங்களில் கூறப்பட்டுள்ள விபரங்களின் பட்டியல்:
- சிறப்புத் திறமையாளர்களின் குடும்பங்களுக்கு 167,124 ரெசிடென்சி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன
- ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களின் குடும்பங்களுக்கு 100,286 ரெசிடென்சி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன
- விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் குடும்பங்களுக்கு 70,247 ரெசிடென்சி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன
- முதலீட்டாளர்களின் குடும்பங்களுக்கு 37,022 ரெசிடென்சி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன
- ஓய்வுபெற்றவர்களின் குடும்பங்களுக்கு 3,259 ரெசிடென்சி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன
மேலும், விசாக்கள், குடியிருப்பு மற்றும் குடும்பப் பதிவுகள் தொடர்பான டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதோடு, முதல் நிலை குடும்ப உறுப்பினர்களுக்கும் கோல்டன் விசா சலுகைகளை துபாய் விரிவுபடுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாயின் எதிர்கால தொலைநோக்குப் பார்வைக்கு குடும்பம் ஒரு மையமாகத் தொடர்கிறது என்று கூறிய GDRFA துபாயின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி அவர்கள், குடியிருப்பாளர்களின் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை வலுப்படுத்தும் ஒரு நெகிழ்வான டிஜிட்டல் சேவை அமைப்பை இந்த அமீரகம் தொடர்ந்து உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், “குடும்பமே தேசத்தின் அடித்தளம்” என்ற கருப்பொருளின் கீழ் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட துபாய் சமூக நிகழ்ச்சி நிரல் 33-இன் இலக்குகளையும் இந்த முயற்சி ஆதரிக்கிறது என்றும்்GDRFA அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel