ADVERTISEMENT

அமீரகத்தில் ஈத் விடுமுறையிலும் வேலை செய்கிறீர்களா? உங்கள் நிறுவனம் உங்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்க வேண்டும் தெரியுமா?

Published: 19 May 2026, 7:50 PM |
Updated: 19 May 2026, 7:50 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாடு முழுவதும் உள்ள குடியிருப்பாளர்கள் இந்த விடுமுறைக்காக பயணத் திட்டங்கள் மற்றும் குடும்பங்களை சந்திப்பதற்காக ஆவலுடன் தயாராகி வரும் வேளையில், சில்லறை வர்த்தகம், விருந்தோம்பல், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் விடுமுறை நாட்களில் பணிக்கு வருமாறு கேட்கப்படலாம்.

ADVERTISEMENT

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் சட்டத்தின்படி, பொது விடுமுறை நாட்களில் பணிபுரியும் ஊழியர்களை ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வைக்க முடியாது. கூடுதல் ஊதியம் அல்லது மாற்று விடுப்பு மூலம் இழப்பீடு வழங்கப்படும் என்று அமீரகத்தின் தொழிலாளர் சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம், தனியார் துறை ஊழியர்களுக்கு மே 26 முதல் மே 29 வரை நான்கு நாட்கள் ஊதியத்துடன் கூடிய ஈத் அல் அதா விடுமுறையை ஏற்கனவே அறிவித்துள்ளது, மேலும் ஜூன் 1 அன்று பணிகள் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில், விடுமுறை நாட்களிலும் பணிபுரியுமாறு உங்கள் நிறுவனம் உங்களுக்கு கட்டளையிடும் பட்சத்தில், ஊழியராக உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2021 ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணை-சட்டம் எண் 33-இன் கீழ், அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்களில் பணிபுரிய வேண்டிய ஊழியர்களுக்கு, முதலாளிகள் இரண்டு விருப்பங்களில் ஒன்றின் மூலம் இழப்பீடு வழங்க வேண்டும்:

ADVERTISEMENT
  • பணிபுரிந்த ஒவ்வொரு விடுமுறை நாளுக்கும் ஈடுசெய்யும் மாற்று விடுமுறை நாள் (Compensatory day off)
  • அல்லது சாதாரண தினசரி சம்பளத்துடன் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் கூடுதல் அடிப்படைச் சம்பளம் (Enhanced holiday pay)

அமீரகத்தில் உள்ள ஊழியர்கள் முழுச் சம்பளத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ விடுமுறைக்கு உரிமையுடையவர்கள் என்றும், அந்த நாட்களில் செய்யப்படும் எந்தவொரு பணிக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், ஈத் அல்-அதா பண்டிகையானது மே 27 அன்றும், அரஃபா தினம் மே 26 அன்றும் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் முதலாளி இழப்பீடு வழங்க மறுத்தால் என்ன செய்வது?

மேற்கூறிய சட்டங்களின் படி, கூடுதல் சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ பெறாத ஊழியர்கள், முதலில் தங்கள் நிறுவனத்திடம் இந்தப் பிரச்சினையை உள்ரீதியாக எழுப்பலாம்.

அவ்வாறு பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், தொழிலாளர்கள் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்திடம் புகார் அளிக்கலாம். இந்த அமைச்சகம் தனியார் துறையில் தொழிலாளர் தகராறுகள் மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகளைக் கையாளுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel