ADVERTISEMENT

ஈத் அல் அதா 2026: ஷார்ஜாவில் மூன்று நாட்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிப்பு!!

Published: 21 May 2026, 4:10 PM |
Updated: 21 May 2026, 5:29 PM |
Posted By: Menaka

ஈத் அல் அதாவிற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஷார்ஜாவில் வசிப்பவர்களும் பார்வையாளர்களும் ஈத் அல் அதாவின் முதல் மூன்று நாட்களில் (மே 27- மே 29) பெரும்பாலான பொது பார்க்கிங் இடங்களை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ஷார்ஜா முனிசிபாலிட்டியின் தலைமை இயக்குனர் ஒபைத் சயீத் அல் துனைஜி அவர்கள் பேசுகையில், ஈத் பண்டிகையின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் பார்க்கிங் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

வழக்கமாக, ஷார்ஜாவில் கட்டண பார்க்கிங் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

ADVERTISEMENT

இருப்பினும், இந்த கட்டண விலக்கு பின்வருவனவற்றிற்குப் பொருந்தாது என்று அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது:

  • நீல நிற அறிவிப்புப் பலகைகளால் அடையாளம் காணப்பட்டு, வாரத்தின் ஏழு நாட்களும் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் கட்டணம் வசூலிக்கும் பார்க்கிங் இடங்கள்
  • எமிரேட் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் பிற முக்கியப் பகுதிகளில் அமைந்துள்ள ஸ்மார்ட் பார்க்கிங் இடங்கள்

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட் பார்க்கிங் இடங்கள், ஷார்ஜா டிஜிட்டல் இணையதளம் மற்றும் செயலி மூலம் தங்களின் வழக்கமான கட்டண முறையிலேயே தொடர்ந்து செயல்படும்.

ADVERTISEMENT

மேலும், பார்க்கிங் தொடர்பான விதிமீறல்களைக் கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு தடையற்ற பார்க்கிங் சேவைகளை உறுதி செய்யவும், ஈத் விடுமுறை நாட்கள் முழுவதும் ஆய்வுக் கூட்டங்கள் தொடரும் என்றும் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

ஈத் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

அதுமட்டுமின்றி, பொது சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு விரிவான ஈத் ஆயத்தத் திட்டத்தையும் முனிசிபாலிட்டி தொடங்கியுள்ளது.

கூடுதலாக, கால்நடை சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களில் கால்நடைகளுக்கான இரத்தப் பரிசோதனை, இறைச்சி வெட்டுவதற்கு முன்னும் பின்னும் ஆய்வுகள் மற்றும் இறைச்சி நுகர்வுக்குப் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வதற்கான சுகாதாரப் பரிசோதனைகள் போன்றவற்றை நடத்துவதற்காக 35 கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக, கால்நடைக் கொட்டகைகள் மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் விரிவான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரித்த உணவுப் பாதுகாப்பு ஆய்வுகள்

ஈத் அல் அதாவின் போது பொருட்கள் வாங்குதல் மற்றும் உணவருந்தும் நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த 61 ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் சுகாதார விதிமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பான பொருட்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, 32 ஆய்வாளர்கள் ஆண்களுக்கான சலூன்களையும் பெண்களுக்கான அழகு மையங்களையும் கண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மீறல்களைக் கண்காணிக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை, குறிப்பாக அங்கீகரிக்கப்படாத நடமாடும் இறைச்சிக் கடைக்காரர்களைத் தடுக்கவும் 239 ஆய்வாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளதாகவும் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களுக்கு வெளியே விலங்குகளை அறுப்பது கடுமையான சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை ஏற்படுத்துகிறது, ஏனெனில் அந்த விலங்குகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை, மேலும் அந்த இறைச்சி உண்பதற்குப் பாதுகாப்பற்றதாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், இத்தகைய சட்டவிரோத இறைச்சி அறுப்பு நடைமுறைகள் முறையான இஸ்லாமியத் தேவைகளையும் சுகாதாரத் தரங்களையும் பூர்த்தி செய்யத் தவறக்கூடும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொது இடங்களும் ஈத் தொழுகை மைதானங்களும் தயார்

அதேசமயம், எமிரேட் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசர காலச் சூழல்களைக் கையாளவும், விடுமுறை நாட்களில் கடற்கரைகள் மற்றும் பொது இடங்களில் ஆய்வுப் பணிகளையும் கண்காணிப்பையும் ஆய்வுத் குழுக்களும் உயிர்காப்பாளர்களும் தீவிரப்படுத்தவுள்ளனர்.

அத்துடன் நகரம் முழுவதும் அமைந்துள்ள ஈத் தொழுகை மைதானங்களை நகராட்சி பின்வருமாறு தயார்படுத்தியுள்ளது:

  • தொழுகைக்கான இடங்களைச் சுத்தம் செய்து சமன்படுத்துதல்
  • பார்க்கிங் இடங்களை அமைத்தல்
  • பூச்சி மற்றும் கிருமி ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல்

ஆகவே, அனைத்து வசதிகளிலும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும், எமிரேட்டில் உள்ள பண்டிகைச் சூழலை அனுபவிக்குமாறும் ஷார்ஜா முனிசிபாலிட்டி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மேலும், ஈத் விடுமுறை நாட்களில், புகார்கள் அல்லது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், நகராட்சியின் 24 மணி நேரச் சேவை மையமான 993-ஐத் தொடர்புகொள்ளலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel