ADVERTISEMENT

குடும்பங்களுக்கான கடற்கரைகள், இலவச ஐஸ்கிரீம் மற்றும் பூங்காக்களில் ஈத் பரிசுகள்.. துபாய் அறிவித்துள்ள ஈத் கொண்டாட்டங்கள்..!!

Published: 22 May 2026, 9:24 AM |
Updated: 22 May 2026, 12:59 PM |
Posted By: Menaka

அமீரகக் குடியிருப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஈத் அல் அதா (Eid Al Adha) பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், துபாய் எமிரேட்டானது ஈத் அல் அதா கொண்டாட்டங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இதில், குடும்பங்களுக்கு மட்டுமேயான கடற்கரைகள், இலவச ஐஸ்கிரீம் விநியோகம், நேரடி இசை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விரிவான பாதுகாப்பு மற்றும் உணவு ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டத் திட்டங்கள் அடங்கும்.

ADVERTISEMENT

இது குறித்து வியாழக்கிழமை அன்று துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்ட தகவலின்படி, ஈத் அல் அதா பண்டிகையின் போது, ​​எமிரேட் முழுவதும் உள்ள பல கடற்கரைகள் குடும்பங்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்படவுள்ளன. அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • ஜுமைரா 1 கடற்கரை
  • ஜுமைரா 2 கடற்கரை மற்றும் இரவு நேரக் கடற்கரை (Night Beach)
  • ஜுமைரா 3 கடற்கரை
  • உம் சுகீம் 1 கடற்கரை மற்றும் இரவு நேரக் கடற்கரை
  • உம் சுகீம் 2 கடற்கரை
  • கோர் அல் மம்சார் கடற்கரை

அதிகாரிகளின் கூற்றுப்படி, நீண்ட ஈத் விடுமுறைக் காலத்தில், குடும்பங்களுக்குப் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சூழலை வழங்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

ADVERTISEMENT

இலவச ஐஸ்கிரீம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள்

ஈத் பண்டிகையின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில், “ஈத் பரிசுகள்” (Eid Gifts) எனும் முன்னெடுப்பை முனிசிபாலிட்டி தொடங்கவுள்ளது. இதன் மூலம், மாலை 4 மணி முதல் 7 மணி வரை பின்வரும் இடங்களில் பார்வையாளர்களுக்கு இலவச ஐஸ்கிரீம் வழங்கப்படும்:

  • அல் பர்ஷா பாண்ட் பார்க் (Pond Park)
  • முஷ்ரிஃப் பார்க்
  • ஜபீல் பார்க்
  • க்ரீக் பார்க்
  • அல் சஃபா பார்க்
  • துபாய் முழுவதும் உள்ள பல்வேறு சமூகப் பூங்காக்கள் (community parks)

மேலும், எமிரேட்டின் அடையாளமான துபாய் ஃப்ரேம் (Dubai Frame) வளாகத்தில், ஈத் பண்டிகையின் முதல் இரண்டு நாட்களிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை நேரடி இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், ஹத்தா சந்தையில் (Hatta Market), ஈத் பண்டிகையின் இரண்டாம் நாளில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை, ‘அல் ஹர்பியா’ (Al Harbiya) இசைக்குழுவின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை எமிராட்டி பாரம்பரியத்தையும் மரபுக் கலைகளையும் போற்றும் வகையில் அமைந்திருக்கும். இதற்கிடையில், சில்ட்ரன்ஸ் சிட்டி ஈத் பெருநாளின் முதல் மூன்று நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பின்வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்:

  • நாடக நிகழ்ச்சிகள்
  • சிறப்பு செயல்பாடுகள்
  • ஒர்க் ஷாப்
  • குடும்ப பொழுதுபோக்கு அனுபவங்கள்

பூங்கா மற்றும் சுற்றுலாத் தலங்களின் நேரங்கள்

இவற்றுடன் துபாய் முனிசிபாலிட்டி பின்வரும் ஈத் பண்டிகைக்கான செயல்பாட்டு நேரங்களையும் உறுதிப்படுத்தியுள்ளது:

  • குர்ஆனிக் பார்க், ஸபீல் பார்க், அல் மம்ஸர் பார்க், அல் சஃபா பார்க், க்ரீக் பார்க் மற்றும் முஷ்ரிஃப் தேசியப் பூங்கா: காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை
  • துபாய் ஃபிரேம்: காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை

உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வுகள்

இவ்வாறு ஒரு பக்கம் அமீரகம் முழுவதும் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பக்கம் அதிகாரிகள் பின்வரும் இடங்களில் ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்:

  • உணவகங்கள்
  • வணிக வளாகங்கள்
  • தற்காலிகக் கடைகள்
  • பொழுதுபோக்கு இடங்கள்
  • இறைச்சிக் கடைகள்
  • வறுக்கும் கடைகள்
  • சாக்லேட் கடைகள்
  • பழம் மற்றும் காய்கறிச் சந்தை
  • வாட்டர்ஃபிரண்ட் சந்தை

ஈத் பண்டிகையின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஆய்வுக் குழுக்கள் உணவு தயாரித்தல், சேமித்தல், கொண்டு செல்லுதல் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டு நடைமுறைகளைக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடியிருப்பாளர்கள் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை துபாய் 24/7 செயலி மூலமாகவோ அல்லது 800900 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி கண்காணிப்பு

ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு இறைச்சிப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், துபாய் முனிசிபாலிட்டியானது இறக்குமதி செய்யப்படும் இறைச்சி சரக்குகள் மீதான சோதனைகளை வலுப்படுத்தியுள்ளது.

அனைத்து இறைச்சி சரக்குகளும் பின்வரும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்:

  • ஹலால் அறுப்புச் சான்றிதழ்களின் சரிபார்ப்பு
  • விரிவான பாதுகாப்பு மற்றும் தரச் சோதனைகள்

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும், கிட்டத்தட்ட 8,000 இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்கள் அடங்கிய சரக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 30,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் சுமார் 66,000 டன்கள் அடங்கும்.

சலூன், ஹோட்டல் மற்றும் நுகர்வோர் தயாரிப்பு சோதனைகள்

அதிகாரிகளின் ஆய்வுப் பணிகள் பின்வரும் இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன:

  • ஹோட்டல்கள்
  • முடி திருத்தும் கடைகள்
  • அழகு நிலையங்கள்
  • ஷிஷா கஃபேக்கள்
  • பொழுதுபோக்கு இடங்கள்
  • குடியிருப்பு கட்டிடங்கள்
  • வணிக வளாகங்கள்

மேலே பட்டியலிடப்பட்டுள்ள இடங்களில், சுகாதாரத் தரநிலைகள், நீரின் தரம், உள்ளகக் காற்றின் தரம், பாதுகாப்பு அமைப்புகள், நீச்சல் குளங்கள், லிஃப்ட்கள் மற்றும் அவசரகாலத் தயார்நிலை ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், பெண்களுக்கான சலூன்களில் பயன்படுத்தப்படும் மருதாணிப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, ஒரு சிறப்பு ஆய்வுப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குழந்தைகளின் பொம்மைகள், அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் மின்சாரப் பொருட்கள் உள்ளிட்ட பருவகாலப் பொருட்களுக்கான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக முனிசிபாலிட்டி மேலும் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்கான ஈத் நிகழ்ச்சிகள்

எல்லாவற்றுக்கும் மேலாக, துபாய் முனிசிபாலிட்டி முஹைஸ்னா 2, அல் குவோஸ் 4 மற்றும் அல் குவோஸ் தொழிற்பகுதி 3 ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிலாளர் சமூக சந்தைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதோடு, ஈத் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.

பொது விடுமுறை நாட்களில் இந்தச் சந்தைகளுக்கு தினமும் 24,000 முதல் 30,000 தொழிலாளர்கள் வருகிறார்கள், மேலும் சுமார் 20,000 பேர் ஈத் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, பண்டிகைக் காலத்தில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 80-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கால்நடைப் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதோடு, ஈத் பண்டிகைக் கூட்டத்தைக் கையாள கால்நடைச் சந்தை மற்றும் அது தொடர்பான வசதிகள் முழுமையாகத் தயாராக உள்ளதையும் முனிசிபாலிட்டி ஆய்வு செய்து வருகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel