பஹ்ரைனில் வசிக்கும் இந்தியர் ஒருவர், அபுதாபியின் ‘பிக் டிக்கெட்’ (Big Ticket) டிராவில் சுமார் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து பங்கேற்ற பிறகு, 2 கோடி திர்ஹம் (Dh20 million) பரிசை வென்றுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவருக்கு வெற்றியைத் தேடித்தந்த அந்தச் சீட்டு, ‘இரண்டு வாங்கினால் இரண்டு இலவசம்’ என்ற ப்ரோமோஷன் சலுகையின் மூலம் இலவசமாகப் பெறப்பட்டதாகும்.
பஹ்ரைனில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும், 43 வயதான உணவக உரிமையாளர் கிருஷ்ணகுமார் சியாமளா ரவீந்திரன், இந்தியாவின் கேரள மாநிலத்தில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தபோது, ’பிக் டிக்கெட்’ தொடர் 287-இல் அதிர்ஷ்டசாலி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற சீட்டின் எண் 339729 ஆகும். நேரலை டிராவின் போது, அந்தச் சீட்டின் மதிப்பு Dh0 (பூஜ்யம்) என்று குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர். ஏனெனில், அந்த சலுகையின் தொகுப்பின் ஒரு பகுதியாக டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்டிருந்தது.
இது குறித்து வெற்றியாளர் கிருஷ்ணகுமார் பேசுகையில், சீட்டு எண்கள் அனைத்தும் தனது மனைவி மற்றும் சகோதரியால் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்றும், சலுகையின் மூலம் கிடைத்த இரண்டு இலவசச் சீட்டுகளில் ஒன்றுதான் எங்கள் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்தது” என்றும் தெரிவித்துள்ளார்.
வெற்றியாளர் கிருஷ்ணகுமார், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களின் பள்ளி விடுமுறையின் போது அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்காக மே 25 அன்று கேரளாவிற்குப் பயணம் மேற்கொண்ட போது, அங்கு இருந்தபடியே மே 28 அன்று இணையம் வாயிலாக இந்தச் சீட்டுகளை வாங்கியுள்ளார்.
மேலும், நேரலை டிரா முடிந்த பிறகு, ‘பிக் டிக்கெட்’ அதிகாரிகள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்களால் அவரை அடைய முடியவில்லை. ஏனெனில், அவர் இந்தியாவில் இருந்ததால் அவரது பஹ்ரைன் மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
“அவர்கள் எனது பஹ்ரைன் எண்ணிற்கு அழைத்தனர், ஆனால் அந்த எண்ணில் ‘ரோமிங்’ (roaming) வசதி செயல்படுத்தப்படவில்லை. பின்னர், எனது இந்திய எண்ணில் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp) வாயிலாக அவர்கள் என்னைத் தொடர்புகொண்டனர்,” என்று அவர் விவரித்துள்ளார்.
ஏழு ஆண்டுகால நம்பிக்கை
கிருஷ்ணகுமாரின் ‘பிக் டிக்கெட்’ பயணம், அவரது வாழ்க்கையில் ஒரு சவாலான காலகட்டத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஹோட்டல் மேலாண்மை படித்து, அத்துறையில் பணியாற்றிய பிறகு, சுமார் 20 வயதில் பஹ்ரைனுக்குக் குடிபெயர்ந்த அவர், காலப்போக்கில், மனாமா நகரில் தனது சொந்த உணவகத்தைத் தொடங்கினார்.
பின்னர், அவ்வப்போது தனது தொழிலில் சில நெருக்கடிகள் ஏற்பட்டபோது, தனது குடும்பத்தினருக்குச் சிறந்த வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில், ஒவ்வொரு மாதமும் ‘பிக் டிக்கெட்’ டிராவில் பங்கேற்பதற்காகச் சீட்டுகளை வாங்கத் தொடங்கியதாகவும், பின்னடைவுகள் இருந்தபோதிலும், ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்கேற்று வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில சமயங்களில் நண்பர்களுடன் டிக்கெட்டுகளைப் பகிர்ந்துகொண்டும், மற்ற நேரங்களில் தானே வாங்கியும் வந்ததாகக் கூறிய அவர், இந்த முறை, முழுப் பரிசையும் வென்ற ஒரே வெற்றியாளர் அவர் மட்டும் தான் என்பதை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் முன்னுரிமை: ஒரு நண்பருக்கு உதவுதல்
இந்த ஜாக்பாட் பரிசு அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடும் என்றாலும், ஒரு கடுமையான விபத்தைத் தொடர்ந்து மூன்று மாதங்களாகக் கோமாவில் இருக்கும் தனது நெருங்கிய நண்பருக்கும் வணிகப் பங்குதாரருக்கும் உதவுவதே தனது உடனடி திட்டம் என்று கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.
மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்ததில் அந்த நண்பருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, தற்போது அவருக்கு விரிவான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.
“மேல் சிகிச்சைக்காக அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதே எனது முதல் முன்னுரிமை,” என்று கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத இந்த பெரும் பணவரவு அவரது குடும்பத்தை திக்குமுக்காடச் செய்துள்ளது. வெற்றி எண்களைத் தேர்ந்தெடுத்த அவரது மனைவியும் சகோதரியும், மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும், “நாங்கள் இன்னும் நம்பமுடியாத நிலையில் இருக்கிறோம். இந்தச் செய்தி இப்போதுதான் மெல்ல மெல்லப் புரியத் தொடங்குகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
கிருஷ்ணகுமார், தற்போது பரிசை அதிகாரப்பூர்வமாகப் பெறுவதற்காகத் தனது குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். தற்போது 6 மற்றும் 3 ஆம் வகுப்புகளில் படித்து வரும் தனது இரண்டு மகன்களுக்கு இது ஒரு மறக்க முடியாத பயணமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மீதமுள்ள பரிசுப் பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவர் இன்னும் முடிவு செய்யவில்லை என்றாலும், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துத் தனது குடும்பத்தினருடன் விவாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel