அமீரகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் உடற்பயிற்சி செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக துபாய் எமிரேட்டானது வரும் ஜூன் 15 முதல், ‘துபாய் மால்லத்தானின் (Dubai Mallathon)’ இரண்டாவது பதிப்பைத் தொடங்கவிருக்கிறது. இது எமிரேட்டின் மிகவும் பரபரப்பான சில ஷாப்பிங் மையங்களை உள்ளரங்க நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் பாதைகளாக மாற்றுகிறது.
துபாயின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் கடந்த ஆண்டு முதன் முதலாக அறிவிக்கப்பட்ட இந்த முயற்சி, உடற்பயிற்சிக்காக பாதுகாப்பான, குளிரூட்டப்பட்ட இடங்களை வழங்குவதன் மூலம், வெப்பமான மாதங்களில் குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 15 வரை தினமும் நடைபெறும் இந்த மூன்று மாத கால நிகழ்ச்சி, துபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், மிர்டிஃப் சிட்டி சென்டர், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், தேரா சிட்டி சென்டர் மற்றும் துபாய் ஹில்ஸ் மால் ஆகிய ஆறு முக்கிய மால்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை, பங்கேற்கும் வணிக வளாகங்களில், வெவ்வேறு வயதுக் குழுக்கள் மற்றும் உடற்தகுதி நிலைகளுக்கு ஏற்றவாறு பிரத்யேக நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் பாதைகள், உடற்பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் துபாய் மேற்கொள்ளும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். கோடைக்காலத்தில் உடல் செயல்பாடுகளை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும், குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூகங்கள் ஒன்றாக உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, துபாய் மால் மற்றும் மிர்டிஃப் சிட்டி சென்டரில் பெண்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகள் நடத்தப்படும். அதே நேரத்தில், அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் உள்ளடக்கிய அனுபவத்தை உறுதி செய்வதற்காக, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உற்சாகத்தை மேலும் கூட்டும் வகையில், கோடைக்காலம் முழுவதும் வார இறுதிப் பந்தயங்கள், போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் இந்த மால்லாத்தானில் இடம்பெறும். இதில் பங்கேற்பாளர்கள் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் வெகுமதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், தொழில்முறை உடற்பயிற்சிப் பயிற்சியாளர்கள் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டவும், ஆயத்தப் பயிற்சிகளை நடத்தவும் தயாராக இருப்பார்கள்.
முக்கிய சிறப்பம்சம் என்னெவெனில், பங்கேற்பு முற்றிலும் இலவசம் மற்றும் முன் பதிவு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், பங்கேற்கும் எந்தவொரு மாலுக்கும் எளிதாகச் சென்று, மல்லாத்தான் கைப்பட்டையைப் பெற்றுக்கொண்டு, உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்கான அணுகலை அனுபவிக்கலாம். அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளிலிருந்து பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளையும் பெறலாம்.
ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை ஈர்த்து, உலகின் மிகப்பெரிய மால் ஓட்டப் போட்டிக்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்த அதன் முதல் பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, துபாய் மீண்டும் வணிக வளாகங்களை உயிரோட்டமான சமூக உடற்பயிற்சி மையங்களாக மாற்றி வருகிறது. இதன் மூலம், கோடைக்காலத்தின் உச்சக்கட்டத்தில்கூட, சுறுசுறுப்பாக இருப்பது வசதியாகவும் வேடிக்கையாகவும் இருக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel