கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற வார இறுதி கிரிக்கெட் போட்டியின்போது, துபாயைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முகமது சஃப்வான் ஷானு (38) என்பவர் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோதே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது திடீர் மறைவு காரணமாக, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அல் குசைஸ் மயானத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பத்கலைச் (Bhatkal) சேர்ந்த சஃப்வான், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு மனைவியும், மூன்று மகன்களும், நான்கு மாதக் கைக்குழந்தையான மகளும் உள்ளனர். மீளாத் துயரத்தில் ஆழ்ந்திருந்த அவரது பெற்றோர், தங்கள் மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியாவிலிருந்து துபாய் வந்திருந்தனர்.
ஒரு சாதாரண வார இறுதி நாளாகத் தொடங்கிய நிகழ்வு, விரைவில் மிகுந்த துயரத்தில் முடிந்தது. சனிக்கிழமை மாலை துபாயின் வாட்டர்ஃபிரண்ட் மார்க்கெட்டில் (Waterfront Market) மளிகைப் பொருட்கள் வாங்கிய சஃப்வான், ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கமாக விளையாடும் கிரிக்கெட் ஆட்டத்திற்குத் தயாரானார் என்றும், பல ஆண்டுகளாக அவர் கடைபிடித்து வந்த வழக்கம் என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த ஆட்டத்தின்போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த சஃப்வான் திடீரெனச் சரிந்து விழுந்தார். சக வீரர்கள் உடனடியாக அவருக்கு உதவ ஓடிவந்து, அவசரச் சேவைப் பிரிவினரை அழைத்தனர். அவரை மீண்டும் உயிர்ப்பிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து தெரிவிக்கையில் “அன்று காலை நாங்கள் ஒன்றாக மைதானத்திற்குச் சென்றோம், அப்போது அவர் மிகவும் நலமாகவே காணப்பட்டார்,” என்று அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் நினைவுகூர்ந்தார். “எல்லாம் மிக விரைவாக நடந்துவிட்டது. இது எங்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.” என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
சஃப்வானின் இறப்புச் செய்தி துபாயின் கிரிக்கெட் மற்றும் வெளிநாட்டவர் சமூகத்தினரிடையே வேகமாகப் பரவியது. இதனால் நூற்றுக்கணக்கான நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.
தொழில்முறை வாழ்க்கையைத் தாண்டி, கிரிக்கெட் மீதான ஆர்வத்திற்காக சஃப்வான் பரவலாக அறியப்பட்டிருக்கிறார். உள்ளூர் அணிகளுக்குத் தலைமை தாங்கிய திறமையான பேட்ஸ்மேனாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது விளையாட்டு வாழ்க்கையில் பல விருதுகளை வென்றவராகவும் நண்பர்கள் அவரை விவரிக்கின்றனர்.
மக்களுடன் எளிதில் பழகும் திறனே சஃப்வானின் மிகப்பெரிய பலம் என்று சமூகத் தலைவர் முனிர் அதிகூர் ரஹ்மான் கூறியுள்ளார்.
அதேபோல், பட்கலில் சஃப்வானுடன் இணைந்து விளையாடி வளர்ந்த சக கிரிக்கெட் வீரரான மொஹ்தாசிம் ஜக்தி, அவரைத் தங்கள் சொந்த ஊரின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விவரித்தார்.
மேலும், இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, துபாயில் நடைபெறவுள்ள இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காகச் சஃப்வானின் பெற்றோருக்கு விசா மற்றும் பயண ஏற்பாடுகளைச் செய்வதில் அவரது உறவினர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தக் கூடியிருந்த வேளையில், பலரும் சஃப்வானை அவரது கிரிக்கெட் சாதனைகளுக்காக மட்டுமல்லாமல், அவரது தாராள குணம், வலுவான உறவுகள் மற்றும் தன்னைச் சுற்றியிருந்தவர்கள் மீது அவர் ஏற்படுத்திய நீடித்த தாக்கம் ஆகியவற்றிற்காகவும் நினைவுகூர்ந்தனர். அவரது திடீர் மறைவு, துபாயின் கிரிக்கெட் சமூகத்திலும், அவர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பலரின் மனங்களிலும் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel