ADVERTISEMENT

துபாயில் 3,000 திர்ஹம்ஸ் ரொக்கத்தை தொலைத்த சுற்றுலாப் பயணி: தாயகம் திரும்பிய பிறகும் பணத்தை மீட்டெடுத்து கொடுத்த அதிகாரிகள்.!!

Published: 19 Jun 2026, 5:26 PM |
Updated: 19 Jun 2026, 5:26 PM |
Posted By: Menaka

பெரும்பாலான பயணிகளைப் பொறுத்தவரை, சொந்த ஊருக்குத் திரும்பும் விமானப் பயணத்திற்குச் சற்று முன்பு பணத்தை தொலைப்பது என்பது, அந்த இழப்பை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்டத்திற்குச் செல்வதாகவே அமையும். ஆனால் துபாயில் ஒரு சுற்றுலாப் பயணிக்கு, இச்சம்பவம் முற்றிலும் மாறுபட்ட ஒரு மகிழ்ச்சியான முடிவைத் தந்துள்ளது.

ADVERTISEMENT

துபாயில் உள்ள பரபரப்பான வணிக வளாகம் ஒன்றில் 3,000 திர்ஹம்ஸ் பணத்தைத் தவறவிட்ட அரபு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், துபாய் காவல்துறையின் துரித நடவடிக்கையால், ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறிய பிறகும் அந்த முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுள்ளார்.

விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்புதான் அந்தப் பெண்மணிக்குத் தன்னிடம் இருந்த பணம் காணாமல் போனது தெரியவந்துள்ளது. உடனே அவர் துபாய் காவல்துறையின் சுற்றுலாப் பயணிகள் உதவிச் சேவையைத் தொடர்புகொண்டதுடன், பணத்தை தொலைத்து விட்டதாகவும், மேலும் தான் விரைவில் நாட்டை விட்டு வெளியேறவிருப்பதாகவும் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு விசாரிக்கப்படும் என்றும், பணம் கண்டெடுக்கப்பட்டால் அவர் சொந்த ஊருக்குச் சென்ற பிறகும் அது அவரிடம் திருப்பித் தரப்படும் என்றும் காவல்துறை அவருக்கு உறுதியளித்துள்ளது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் காவல் பிரிவின் ‘வணிக வளாகப் பாதுகாப்புப் பிரிவு’ (Shopping Centres Security Section) சார்ந்த சிறப்புத் குழுவினர் உடனடியாகத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியதாகவும், அந்த வணிக வளாகத்திற்குள் அப்பெண்மணி சென்ற இடங்கள் மற்றும் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து ஆய்வு செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதிகாரிகளின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, வெறும் இரண்டு மணி நேரத்திற்குள், காணாமல் போன பணம் அங்கிருந்த கடைகளில் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர், அதிகாரிகள் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்களுடன் பணத்தின் அளவு மற்றும் நோட்டுகளின் எண்ணிக்கையைச் சரிபார்த்து, அதற்கான நடைமுறைகளையும் நிறைவு செய்தனர்.

அதுமட்டுமில்லாமல், மீட்கப்பட்ட பணம் பின்னர் அந்தச் சுற்றுலாப் பயணிக்கு அவரது சொந்த நாட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பணம் மீண்டும் கிடைக்கும் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய அப்பெண்மணி, துபாய் காவல்துறைக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், துபாயிலிருந்து வெளியேறிய பிறகும் தமக்குக் கிடைத்த துரிதமான நடவடிக்கை மற்றும் தொடர்ச்சியான தகவல் தொடர்பைப் பாராட்டிய அவர், இச்சம்பவம் அந்நகரின் பாதுகாப்பு மற்றும் நேர்மைக்குச் சான்றாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

தொலைந்துபோன மதிப்புமிக்க பொருட்களை மீட்டெடுத்து அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் துபாய் காவல்துறை மேற்கொண்டு வரும் முயற்சிகளை வெளிப்படுத்தும் தொடர் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

ஏற்கனவே, இம்மாதத் தொடக்கத்தில், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் GCC நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவரின் தவறவிடப்பட்ட பையை அதிகாரிகள் மீட்டனர். அப்பையில் 1,03,880 திர்ஹம்ஸ் மதிப்புள்ள மூன்று விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், மடிக்கணினி மற்றும் டேப்லெட் ஆகியவை இருந்தன. சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பிறகு அவை அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மே மாதத்தில், விமான நிலையத்தில் ஆசிய நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவரிடம், சுமார் 2 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள வெள்ளித் கட்டிகள் இருந்த கைப்பையை காவல்துறை மீட்டுக் கொடுத்தது. மற்றொரு சம்பவத்தில், 20,000 டாலர் ரொக்கம் மற்றும் தங்கம் இருந்த பையை உரிமையாளர் மறந்து வைத்துவிட்டுச் சென்றிருந்த நிலையில், விமானம் புறப்படுவதற்கு முன்பே அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவங்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என இரு தரப்பினருக்கும் உலகின் மிகப்பாதுகாப்பான இடங்களுள் ஒன்றாகத் திகழும் துபாயின் நற்பெயரைத் தொடர்ந்து வலுப்படுத்துகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel