எதிஹாட் ரயில் ஃப்ரைட் (Etihad Rail Freight) மற்றும் AD போர்ட்ஸ் குழுமம் (AD Ports Group) இணைந்து தொடங்கியுள்ள ஒரு புதிய சேவையின் கீழ், ஃபுஜைரா முனையங்களுக்கு வரும் சரக்குகள் இப்போது அபுதாபியின் தொழில் நகரமான அபுதாபி தொழிற்பேட்டைக்கு (ICAD) நேரடியாக இரயில் மூலம் சென்றடைய முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய இரயில் இணைப்பு, சரக்கு அனுமதியை எளிதாக்கவும், கையாளும் பணிகளைக் குறைக்கவும், மேலும் வணிகங்கள் தங்கள் கிடங்குகள், தொழிற்சாலைகள் மற்றும் இறுதிச் சந்தைகளுக்கு அருகில் பொருட்களைப் பெற உதவவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய சேவையின் கீழ், ஃபுஜைரா முனையங்களுக்கு வரும் கண்டெய்னர்கள் இரயில் மூலம் ICAD-க்கு கொண்டு செல்லப்படலாம். அங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு அருகிலேயே சுங்க அனுமதி, ஆய்வு மற்றும் சரக்கு விடுவிப்பு ஆகியவற்றை முடிக்க முடியும்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த சேவையானது ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சரக்குகளைக் கையாளும் இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தளவாட நிறுவனங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்தத் தொடக்கத்தை ஆதரிக்கும் ஒரு முக்கிய முன்னேற்றம், ICAD-க்கு அதன் சொந்த ஐ.நா. LOCODE ஆன “AECAD” வழங்கப்பட்டிருப்பது ஆகும். இது, உலகளாவிய கப்பல் மற்றும் வர்த்தக அமைப்புகளுக்குள் இந்தத் தொழில் நகரத்திற்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தளவாட மையத்தை வழங்குகிறது.
முதல் முறையாக, கப்பல் நிறுவனங்கள், சரக்கு அனுப்புநர்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்கள் ICAD-ஐ நேரடியாக சேருமிடம் மற்றும் சுங்க அனுமதி மையமாக முன்பதிவு செய்ய முடியும்.
விரைவான சுங்க அனுமதி மற்றும் குறைவான சாலைப் போக்குவரத்து
கண்டெய்னர்கள் ஃபுஜைரா முனையங்களுக்கு வந்தவுடன், அவற்றை திட்டமிடப்பட்ட ரயில் சேவைகள் மூலம் ஆய்வு, சுங்க அனுமதி மற்றும் விடுவிப்புக்காக ICAD-க்கு கொண்டு செல்லலாம்.
இந்தச் சேவை, அதிக அளவு சரக்குகளுக்கான திறனை அதிகரிப்பதோடு, நீண்ட தூர லாரிப் போக்குவரத்தின் தேவையையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இது சாலை நெரிசலைக் குறைக்கவும், சரக்குப் போக்குவரத்துடன் தொடர்புடைய கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவும்.
இது குறித்து எதிஹாட் ரயில் சரக்கு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உமர் அல்செபேயி கூறுகையில், புதிய ஃபுஜைரா-ICAD சேவையானது, முக்கிய துறைமுக மற்றும் சுங்க சேவைகளை, சரக்குகள் இறுதியில் தேவைப்படும் இடத்திற்கு அருகில் கொண்டு வருவதன் மூலம், போக்குவரத்தையும் தாண்டிச் செல்கிறது என்று எடுத்துரைத்துள்ளார்.
AD போர்ட்ஸ் குழுமத்துடனான இந்தக் கூட்டாண்மை, வாடிக்கையாளர்கள் பொருட்களை மிகவும் திறமையாகக் கொண்டு செல்லவும், தளவாட நடைமுறைகளை எளிமையாக்கவும், கப்பல் வருகைக்கும் இறுதி விநியோகத்திற்கும் இடையிலான நேரத்தைக் குறைக்கவும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவரக்ளைத் தொடர்ந்து பேசிய, AD போர்ட்ஸ் குழுமத்தின் துறைமுகங்கள் கிளஸ்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான சைஃப் அல் மஸ்ரூயி, இந்தச் சேவை ஃபுஜைரா முனையங்கள், அமீரக தேசிய ரயில் நெட்வொர்க் மற்றும் ICAD ஆகியவற்றை இணைத்து, மேலும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து அமைப்பை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில், இந்த புதிய சேவையானது, அமீரகம் முழுவதும் சரக்கு போக்குவரத்தை மிகவும் சீராகவும் நம்பகமானதாகவும் மாற்ற உதவுவதோடு, விநியோகச் சங்கிலிகளை நிர்வகிப்பதில் வணிக நிறுவனங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel