சவூதி தலைநகர் ரியாத்தை குறிவைத்து சமீப நாட்களாக ஹூதி அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் ரியாத்தில் ஹூதி அமைப்பின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கப்பட்டபோது சிதறிய பாகங்கள் தாக்கியதில் நால்வர் காயமடைந்ததாகவும், 15 வீடுகள் சேதமடைந்ததாகவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. அதேவேளையில், கிழக்கு நகரமான தஹ்ரானில் உள்ள Aramco நிறுவனத்தின் நிர்வாகக் கட்டிடம் மீதான தாக்குதலால் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை மாலை Aramco கட்டிடம் தாக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்றும் சவுதி எரிசக்தி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவுக்கும் ஏமனின் ஹூதி இயக்கத்திற்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
ரியாத்தில் காயமடைந்த நால்வரில் இரு பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை அடங்குவர் என்று சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இடைமறித்து அழிக்கப்பட்ட இரண்டு ஏவுகணைகளின் சிதறல்களே இந்தக் காயங்களுக்குக் காரணம் என்றும் அதிகாரசபை கூறியுள்ளது.
ஏமனில் உள்ள இலக்குகள் மீது சவுதி தலைமையிலான கூட்டணி தாக்குதல்
ஏமனின் சனா, தமர் மற்றும் சாதா மாகாணங்களில் உள்ள எண்ணெய் தொடர்பான கட்டமைப்புகள் மீது செவ்வாய்க்கிழமை சவுதி தலைமையிலான கூட்டணி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.
ஹூதிகள் தங்கள் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், சவுதி அரேபியா, ஏமன், தெற்கு செங்கடல் மற்றும் முக்கிய நீர்வழிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கவும் இந்தக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தியதாகக் கூட்டணிப் படைகளின் செய்தித் தொடர்பாளர் துருக்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
ரியாத் விமான நிலையத் தாக்குதலுக்குப் பின் அதிகரித்த பதற்றம்
சனிக்கிழமையன்று ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், விமான நிலையச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. சவுதி மண்ணில் பல ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகத் தீவிரமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
தலைநகர் சனாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏமன் பெட்ரோலிய நிறுவனக் கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, சனா நகரின் சில பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு சவுதி தலைமையிலான கூட்டணி எச்சரிக்கை விடுத்திருந்தது. தாக்குதல்கள் தொடர்ந்தால், ரியாத்தின் சர்வதேச விமான நிலையம், தம்மாமில் உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அராம்கோ ஆலை ஆகியவற்றைத் தாக்குவோம் என ஹூதிகள் அச்சுறுத்தியதோடு, பொதுமக்கள் அந்த இடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் வலியுறுத்தியுனர்.
இதைத் தொடர்ந்து, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான சவூதி அரேபியாவின் அமைச்சரவை, செவ்வாயன்று, செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டாப் நீரிணையில் தனது பாதுகாப்புக்கோ அல்லது கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தல் ஏற்பட அனுமதிக்காது என்று கூறியுள்ளது.
இந்நிலையில், பல நாடுகள் சவூதி அரேபியாவுக்குப் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரக் கவலைகள்
தொடர்ந்து நீடிக்கும் பாதுகாப்புச் சூழல் ரியாத்தில் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. பள்ளிகள் தொலைநிலைக் கற்றலுக்கு மாறியதாலும், சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியதாலும் இந்த வாரம் போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது என உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய மோசமான பரந்த மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில், எரிசக்தி ஏற்றுமதி மற்றும் பிராந்திய வர்த்தகத்திலும் சவூதி அரேபியா இடையூறுகளைச் சந்தித்துள்ளது. இதில் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தைப் பாதிக்கும் கட்டுப்பாடுகளும் அடங்கும். மேலும், செங்கடலில் எண்ணெய் கப்பல்கள் மீதான ஹூதிகளின் தாக்குதல்கள், மாற்று ஏற்றுமதி வழிகள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.
இதனிடையே ஏமனில், மீண்டும் தொடங்கிய சண்டைகள் ஏற்கனவே கடுமையான மனிதாபிமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல், சந்தேகிக்கப்படும் காலரா பாதிப்புகள் மூன்று வாரங்களில் மும்மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு செவ்வாயன்று கூறியது. இது, மோதலில் காயமடைந்தவர்களுக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரியாத் விமான நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹூதிகளுக்கு எதிரான சவுதி தாக்குதல்களில் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
செவ்வாயன்று ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஹூதிகள் மோசமாக நடந்து கொள்வதாகவும், அவர்கள் ஈரானின் கட்டளைப்படி செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், டிரம்ப் தலையிட வேண்டாம் என வாஷிங்டனை ஹூதிகள் எச்சரித்தனர். அமெரிக்கா தலையிட்டால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க நலன்களை இந்த இயக்கம் குறிவைக்கும் என்று அக்குழுவின் அரசியல் குழுவின் உறுப்பினர் முகமது அல் புகாரி, செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா தனது சொந்தப் பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளாமல், ஏமனுக்கு எதிராக இனிமேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு உணர்த்துவதே, சவூதி இலக்குகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel