ஃபுஜைராவில் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 லாரிகள் மற்றும் பல வாகனங்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். அதில் ஷார்ஜாவிலிருந்து ஃபுஜைராவுக்குத் திரும்பிக்கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, விபத்தில் சிக்கி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த துயர விபத்தில், 21 வயதுடைய இரட்டையர்களும், அவர்களுடன் பயணித்த மூன்று வயது உறவினரான சிறுவன் ஒருவனும் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
புதன்கிழமை இரவு சுமார் 10:45 மணியளவில், உறவினர் ஒருவரை ஷார்ஜாவில் விட்டுவிட்டு ஃபுஜைராவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் பயணித்த டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார், லாரி ஒன்றின் மீது மோதியதில், மூவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், சிறுவனின் தாய் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த மேலும் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் முகமது அஸ்மில், அவரது இரட்டைச் சகோதரி மிஸ்னா ஜுபின் (இருவருக்கும் வயது 21) மற்றும் அவர்களின் மூன்று வயது மருமகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தச் சிறுவன், இவர்களின் மூத்த சகோதரி ஃபர்சானாவின் மகன் ஆவார். ஃபர்சானாவும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் கூறுகையில், நான்கு உடன்பிறப்புகளில் இளையவர்களான இந்த இரட்டையர்கள் ஃபுஜைராவிலேயே வளர்ந்தவர்கள் என்றும், இவர்களின் தந்தை சித்திக், 1980-களிலிருந்தே ஃபுஜைராவில் உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
முகமது தனது தந்தைக்கு உணவகத்தில் தொடர்ந்து உதவி செய்து வந்ததால், அப்பகுதி மக்களுக்கு அவர் நன்கு அறிமுகமானவராகயிருக்கிறார்.
இது குறித்துப் பேசிய போது, “அவர் எப்போதும் புன்னகைத்த முகத்துடன் அனைவரையும் வரவேற்பார். இனி அந்தப் புன்னகை முகத்தை என்னால் பார்க்க முடியாது என்பதை என்னால் நம்ப முடியவில்லை,” என்று குடும்ப நண்பர் ஒருவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
சித்திக் மருத்துவ சிகிச்சைக்காகத் தனது சொந்த ஊரான கேரளாவிற்குச் சென்றிருந்த நிலையில், குடும்பத்தினர் அனைவரும் சமீபத்தில் அமீரகம் திரும்பியிருந்ததாகவும், அவர்கள் கடந்த திங்கள்கிழமைதான் ஃபுஜைரா வந்தடைந்தனர் என்றும் அவர்களின் நண்பர்கள் கூறுகின்றனர்.
ஃபுஜைரா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முன்னால் சென்ற வாகனத்திற்கும் இவர்களது வாகனத்திற்கும் இடையே போதிய இடைவெளியைப் பராமரிக்கத் தவறியதே இந்த விபத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சடங்குகள்
ஃபுஜைரா இந்திய மையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் உறுதிப்படுத்திய தகவலின்படி, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஃபுஜைராவில் உள்ள பழைய எடிசலாட் மசூதியில் (Old Etisalat Mosque) இரட்டையர்கள் மற்றும் சிறுவனுக்கான இறுதிச் சடங்குகள் (ஜனாஸா தொழுகை) நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியத் தூதரகம் உதவி
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, துபாயில் உள்ள இந்தியத் தூதரகம், இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் தொடர்புகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தூதரகம், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து அனைத்து விதமான உதவிகளையும் ஆதரவையும் வழங்க ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
புதன்கிழமை இரவு ஃபுஜைராவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், 18 வாகனங்கள் மற்றும் ஐந்து லாரிகள் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel