துபாயின் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் துபாய் மெட்ரோ ப்ளூ லைனுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மெட்ரோ ப்ளூ லைன் ரயில்களின் புதிய வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களை அதிகாரிகள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். பயணிகளின் வசதியை மையமாகக் கொண்டு இந்த புதிய தலைமுறை ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இன்று (ஞாயிற்றுக்கிழமை), துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் இந்த புதிய மெட்ரோ திட்டத்தின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ப்ளூ லைன் திட்டத்தின் பணிகள் சுமார் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் திட்டமிட்டபடி செப்டம்பர் 2029-க்குள் இந்த சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த புதிய மெட்ரோ ரயில்கள் ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் 675 பயணிகள் அமர்ந்து பயணிக்க முடியும். ஒட்டுமொத்தமாக, ஒரு முறைக்கு அதிகபட்சமாக 1,246 பயணிகள் வரை பயணம் செய்யும் வகையில் இதன் கொள்ளளவு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வழக்கமான கோல்டு கிளாஸ், சில்வர் கிளாஸ் மற்றும் பெண்கள் – குழந்தைகளுக்கான பிரத்யேக கேபின்கள் ஆகிய மூன்று பிரிவுகள் இதிலும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது .
பிரிவு வாரியாக சிறப்பு அம்சங்கள்
- கோல்டு கிளாஸ் (Gold Class): இந்தப் பிரிவில் பிரீமியம் இருக்கைகள், ஸ்மார்ட் லைட்டிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இருக்கைகளுக்கு இடையே சுழலும் ஆர்ம்ரெஸ்ட்கள், வெளிப்புற வெப்பநிலை மற்றும் நேரத்தைக் காட்டும் டிஜிட்டல் திரைகள் மற்றும் இரவின் அழகை கண்முன் கொண்டுவரும் ‘ஸ்டாரி-ஸ்கை’ (starry-sky) கூரை வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.
- சில்வர் கிளாஸ் (Silver Class): பயணிகள் கூட்ட நெரிசலின்றி எளிதாக நடந்து செல்ல உதவும் வகையிலான வண்ணக் கலவைகள், மடிக்கக்கூடிய சீட் செப்பரேட்டர்கள் மற்றும் டூ-டோன் முன்னுரிமை இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கேபின்: இந்தப் பகுதியை மற்ற பிரிவுகளில் இருந்து தெளிவாக அடையாளம் காணும் வகையில், இருக்கைகள் மற்றும் கதவுகள் சாஃப்ட் பிளஷ் (blush) நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள்
புதிய ப்ளூ லைன் ரயில்களில் அதிநவீன குளிர்சாதன வசதி (HVAC) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 20 சதவீதம் வரை மின்சக்தி சேமிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய மற்றும் அடுத்த நிலையங்கள் குறித்த விவரங்கள், தேதி, நேரம் மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களைக் காட்டும் நவீன திரைகளும் ரயில்களில் இடம்பெற்றுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.