ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் உள்ள அல் வதன் (Al Watan) சாலையில், பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று லாரியுடன் மோதியதில் 11 பேர் உயிரிழந்ததாக, உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை, விபத்து நடந்த நேரம் மற்றும் உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், ஆம்புலன்ஸ் சேவைகள், சிவில் பாதுகாப்புத் துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விபத்து நடந்த இடத்தைப் பாதுகாப்பதற்கும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் குழுக்கள் பணியாற்றியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, விபத்துக்கான சூழல் மற்றும் காரணங்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும்,விசாரணை முடிந்ததும் கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சகம், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்தைத் தாங்கும் மன உறுதியும் பொறுமையும் கிடைக்கட்டும் என்றும் பிரார்த்தனை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும், விபத்து குறித்த வதந்திகளையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத செய்திகளையோ பகிர வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அடுத்தடுத்து நிகழும் கோர விபத்து
ராஸ் அல் கைமாவில் இந்த விபத்து நிகழ்வதற்கு வெறும் 12 நாட்களுக்கு முன்புதான், ஃபுஜைராவில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, நவம்பர் 12 அன்று ஷேக் கலீஃபா பின் சையத் சாலையில் (E84) அடுத்தடுத்து இரண்டு விபத்துகள் நடந்ததாக அமீரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் விபத்தில், ஒரு வாகனம் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இரண்டாவது விபத்தில், இரண்டு கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற லாரி, பல வாகனங்கள் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த இரண்டு விபத்துகளும், பராமரிப்புப் பணிகளுக்காக வலதுபுறச் சாலைப் பாதை மூடப்பட்டிருந்த பகுதியில் நிகழ்ந்துள்ளன.
லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனமே மற்ற வாகனங்கள் மீது மோதியதாகவும், அதன் விளைவாக ஒரு வாகனம் கவிழ்ந்ததாகவும் உள்துறை அமைச்சகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. கவிழ்ந்த அந்த வாகனம், போக்குவரத்து மெதுவாகச் சென்றதால் நின்றுகொண்டிருந்த பிற வாகனங்கள் மீது மோதியது.
இதன்போது லாரியில் தீப்பிடித்தது, அந்தத் தீ மற்ற வாகனங்களுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.
லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, உரிய பாதுகாப்புடன் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, உயிரிழந்த 14 பேரில் நான்கு இந்தியர்களும், 10 அமீரக குடிமக்களும் அடங்குவர். காயமடைந்தவர்களில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தியா, பிரேசில், பாகிஸ்தான், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
மற்றொரு விபத்தில், நவம்பர் 10-ஆம் தேதி நள்ளிரவு வாக்கில் புஜைரா-கோர் ஃபக்கான் சாலையில், நான்கு பேருடன் சென்ற கார் ஒன்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
இவ்வாறு அமீரகத்தில் ஆங்காங்கே அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel