ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா, உம் அல் குவைன், அஜ்மான், ஃபுஜைரா ஆகிய நான்கு எமிரேட்டுகளில் தேசிய தினத்தை முன்னிட்டு போக்குவரத்து அபராதத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ராஸ் அல் கைமாவில் உள்ள அதிகாரிகளும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடி திட்டத்தைப் பெறலாம் என்று அறிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன்விழாவைக் கொண்டாடும் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து அபராத தள்ளுபடி அறிவித்த 5 வது எமிரேட்டாக ராஸ் அல் கைமா இருக்கின்றது.
ராஸ் அல் கைமாவில் டிசம்பர் 5, 2021 முதல் ஜனவரி 3, 2022 வரை வாகன ஓட்டிகள் தள்ளுபடியைப் பெறலாம் என்று ராஸ் அல் கைமா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குடியிருப்பாளர்கள் ரேடார் அபராதம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தல் மற்றும் போக்குவரத்து புள்ளிகள் ஆகியவற்றை ரத்து செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது கடுமையான குற்றம் புரிந்தோருக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.