ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு பயணிக்கும் நபர்கள் அபுதாபிக்குள் நுழைய புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
அது தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அபுதாபிக்குள் நுழைய புதிதாக மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஏன்?
அபுதாபியில் குறைந்த கொரோனா தொற்று விகிதத்தை தொடர்ந்து பராமரிக்க உதவும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அபுதாபிக்குள் நுழைவதற்கான புதிய செயல்முறை என்ன?
அபுதாபியில் நுழையும் ஒவ்வொருவரும் இப்போது மொபைல் சாதனம் வழியாக எளிய, விரைவான EDE ஸ்கேன் செய்ய வேண்டும்.
EDE ஸ்கேன் எவ்வாறு மேற்கொள்ளப்படும்?
ஸ்கேன் செய்யும் நபர் அபுதாபிக்குள் நுழைபவர்களின் முன் மொபைல் ஸ்கேனிங் சாதனத்தை சில வினாடிகளுக்கு வைத்திருந்து சோதனை செய்வார்.
EDE ஸ்கேனர் எப்படி வேலை செய்கிறது?
மின்காந்த அலைகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுவதன் மூலம் சாத்தியமான கொரோனா பாதிப்புகளை விரைவாகக் கண்டறிய இது மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இது ஸ்கேன் செய்யும் நபரின் முகம் அல்லது தனிப்பட்ட தகவலைச் சேமிக்குமா?
இல்லை. தனிப்பட்ட நபர்களின் தகவல்களை சேமிக்காது
ஸ்கேன் மூலம் சாத்தியமான கொரோனா பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டால் என்ன செய்வது?
இலவச கொரோனா ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ள, அவர்கள் ஆன்-சைட் சோதனை மையத்திற்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.
ஆன்டிஜென் சோதனை என்றால் என்ன?
ஆன்டிஜென் சோதனை மூலம் கொரோனாவால் உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டறிய முடியும். இதில் ஒரு நபரின் சோதனை மாதிரி சேகரிக்கப்பட்டு அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்படும்.
ஆன்டிஜென் சோதனைக்கு பணம் செலுத்த வேண்டுமா?
இல்லை, இது முற்றிலும் இலவசம்.
ஆன்டிஜென் சோதனையின் முடிவுகளைப் பெற எவ்வளவு நேரம் ஆகும்?
20 நிமிடங்களுக்குள் இந்த சோதனை முடிவு தெரிவிக்கப்படும்.
வெளிநாட்டிலிருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு இந்த செயல்முறை பொருந்துமா?
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அபுதாபிக்கு வரும் எவருக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
ஆன்டிஜென் சோதனையில் மீண்டும் பாஸிட்டிவ்வாக வந்தால் என்ன செய்ய வேண்டும்?
மற்ற எமிரேட்டில் இருந்து அபுதாபிக்கு வந்தவர்கள் அபுதாபி குடியிருப்பாளர்களாக இருந்து சோதனையில் பாஸிட்டிவ் வந்தால் அவர்கள் அபுதாபியில் இருக்கும் நடைமுறைகளை பின்பற்ற பரிந்துரைக்கப்படும்.
அதன்படி அவர்கள் கைப்பட்டை (wristband) அணிவிக்கப்பட்டு தங்களது வீட்டிலோ அல்லது தங்கும் இடத்திலோ தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும்.
அபுதாபி அல்லாமல் மற்ற எமிரேட்டுகளில் வசிப்பவர்களுக்கு ஆன்டிஜென் சோதனையில் பாஸிட்டிவ் வந்தால், அவர்கள் எந்த எமிரேட்டில் இருந்து அபுதாபி பயணித்தார்களோ அதே எமிரேட்டிற்கு திருப்பி அனுப்பப்படும். அங்கு சென்ற பின்னர் அவர்கள் சோதனை முடிவை சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்
AlHosn செயலியில் எனது கிரீன் பாஸ் இன்னும் செல்லுபடியாகும் பட்சத்தில் EDE ஸ்கேன் செய்ய வேண்டுமா?
ஆம். கிரீன் பாஸ் நிலையை கருத்தில் கொள்ளாமல் அபுதாபி பயணிக்கும் அனைவருக்கும் இந்த ஸ்கேன் செய்யப்படும்.