ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் அரேபியா விமான நிறுவனம், அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு செல்ல கூடிய அதன் விமானங்களின் ஒரு வழி பயணத்திற்கு சிறப்பு கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமீரகத்தில் ஷார்ஜாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் அரேபியா சென்னை, கோவை உட்பட இந்தியா முழுவதும் 13 நகரங்களுக்கு அதன் சிறப்பு ஒருவழி விமான பயண கட்டணத்தை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு கட்டணமானது இந்தியாவின் சில நகரங்களுக்கு 250 திர்ஹம்ஸ் கட்டணத்தில் இருந்து தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏர் அரேபியா விமான நிறுவனமானது ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் கோவை சர்வதேச விமான நிலையங்களுக்கு நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு விமான பயண கட்டணத்தின் கீழ் ஷார்ஜாவிலிருந்து சென்னைக்கு செல்ல குறைந்த பட்ச விமான கட்டணமாக வெறும் 300 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏர் அரேபியா தமிழ்நாட்டில் நேரடி விமான சேவையை வழங்கும் மற்றொரு நகரமான கோவைக்கு செல்ல குறைந்த பட்ச சிறப்பு விமான பயண கட்டணமாக வெறும் 378 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவை தவிர இந்தியாவின் பிற நகரங்களான கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூர், தில்லி, மும்பை, அகமதாபாத், கோவா மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களுக்கும் இந்த சிறப்பு விமான பயண கட்டணத்தை ஏர் அரேபியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் ராஸ் அல் கைமா மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு இடையேயான தனது ஷட்டில் பஸ் சேவைகளை தினசரி மூன்று முறை ஒரு பயணிக்கு 30 திர்ஹம் என்ற கட்டணத்தில் மீண்டும் ஏர் அரேபியா விமான நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஜனவரி 7 ஆம் தேதி முதல் அனைத்து சர்வதேச பயணிகளும் இந்தியா வந்தவுடன் கட்டாயமாக ஏழு நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்திருந்ததை தொடர்ந்து அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள் தங்களின் விமான கட்டணத்தை அதிரடியாக குறைத்தது. இந்நிலையில் ஏர் அரேபியா அதன் விமான பயண கட்டணத்தை மேலும் அதிரடியாக குறைத்து சிறப்பு விமான பயண கட்டணத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

