கொரோனா தொடர்பான தொடர்புத் தடமறிதல் மற்றும் சுகாதார நிலைக்கான அமீரகத்தின் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷனான Al Hosn செயலி ஒரு சிறந்த அப்ளிகேஷன் என உலகளாவிய விருதை வென்றுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் எக்ஸலன்ஸ் அவார்ட்ஸ் (GEA) அமைப்பானது அல் ஹோஸ்ன் செயலிக்கு கொரோனா தொடர்பான பிரிவில் ‘ஆப் ஆஃப் தி இயர் 2021 (App of the year 2021)’ என்ற விருதை வழங்கியுள்ளது.
சமூகம் மற்றும் குடிமக்களுக்கு மதிப்பு சேர்க்கும் பயன்பாடுகளை GEA அங்கீகரிக்கிறது. இந்த விருதானது டிஜிட்டல் மாற்றத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அமைப்பின் மேம்பட்ட நிலையையும், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் இடைவிடாத முயற்சிகளின் செயல்திறனையும் பிரதிபலிக்கிறது.
அல்ஹோஸ்ன் நேஷனல் ஹெல்த் சிஸ்டம், சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக இந்த விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நவீன தேசிய டிஜிட்டல் அமைப்புகளில் இந்த AlHosn அப்ளிகேஷன் முக்கிய ஒன்றாகும். இது கோவிட்-19 PCR சோதனைகள், தடுப்பூசி மற்றும் தடுப்பூசி போடுவதற்கு விலக்கு பெற்றவர்களின் நிலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அத்துடன் அரபு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கிடைக்கிறது.
மேலும் ஸ்மார்ட்ஃபோன் கேமரா அல்லது இந்த அப்ளிகேஷனில் உள்ளமைக்கப்பட்ட ஸ்கேனர் மூலம் படிக்கக்கூடிய App QR குறியீடு, தடுப்பூசிகள் மற்றும் சோதனைகளை அடையாளம் காணப் பயன்படுகிறது. இந்த அப்ளிகேஷன் பயனர்களின் தகவல்களை ரகசியமாக வைத்திருக்கிறது. இதில் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் என்க்ரிப்டடு (encrypted) முறையில் சேமிக்கப்படுகிறது.
அத்துடன் அபுதாபியில் பல்வேறு பொது இடங்களுக்கு இந்த அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் Al Hosn அப்ளிகேஷனில் டிராவல் பாஸ் (Travel Pass) இப்போது கிடைக்கிறது. இது EU டிஜிட்டல் கொரோனா சான்றிதழ்களுக்குச் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.