அமீரகத்தின் தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அதில் ஒன்றாக பொருளாதார மற்றும் சுற்றுலா இடங்களில் அனைத்து சமூக விலகல் விதிமுறைகளும் அகற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.
திறந்த வெளிகளில் முக கவசம் அணிய தேவையில்லை என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், மூடிய இடங்களில் முக கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் தேவையைப் பின்பற்றுவதன் தொடர்ச்சியையும் NCEMA வலியுறுத்தியுள்ளது.
இல்லையெனில் அனைத்து உள்ளூர் நிகழ்வுகள், கண்காட்சிகள், செயல்பாடுகள், கலாச்சார மற்றும் சமூக நடவடிக்கைகளில் கலந்துகொள்ள 96 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான PCR சோதனை முடிவை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வேளையில், அனைத்து வயதினருக்கும் அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை திரும்ப பெறுவதாக ஆணையம் அறிவித்துள்ளது. இது பொது சுகாதாரம் மற்றும் பல்வேறு முக்கிய துறைகளுக்கு இடையே சமநிலையை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் திட்டத்திற்கு ஏற்ப இந்ததிருத்தங்கள் வந்துள்ளன மற்றும் நிலையான மீட்சியை அடைவதற்கான நாட்டின் முயற்சிகளை ஆதரிக்கின்றன என கூறப்பட்டுள்ளது.