எக்ஸ்போ 2020 துபாயானது தனது இறுதி கட்டத்தை அடைந்திருக்கும் வேளையில் அங்கிருக்கும் இந்தியன் பெவிலியனில் புகழ்பெற்ற இந்திய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அதில் தமிழ்ப்படங்களும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 18 முதல், எக்ஸ்போ 2020 துபாயில் உள்ள இந்தியா பெவிலியன் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் வாரங்களை நடத்த உள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் தேசிய விருது பெற்ற பல படங்கள் திரையிடப்படும். அதில் அசுரன், விஸ்வாசம், சூப்பர் டீலகஸ் போன்ற படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்த படங்களுடன் சேர்த்து போன்ஸ்லே (இந்தி), கேசரி (இந்தி), ஜ்யேஷ்தோபுத்ரோ (பெங்காலி), கும்னாமி (பெங்காலி), ஜல்லிக்கட்டு (மலையாளம்), ஹெலன் (மலையாளம்), ஜெர்சி (தெலுங்கு), மகரிஷி (தெலுங்கு), பிக்காசோ (மராத்தி), ஆனந்தி கோபால் (மராத்தி) மற்றும் ஹர்ஜீதா (பஞ்சாபி) ஆகிய படங்களும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இசையமைப்பாளர்களான AR ரஹ்மான், அனிருத், இளையராஜா எக்ஸ்போவில் இசைக்கச்சேரி நடத்தியதை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு யுவன் ஷங்கர் ராஜாவும் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
அத்துடன் இந்த வார இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பாக எக்ஸ்போவில் நடைபெறும் விழாவில் பங்கு கொள்ள தனிவிமானத்தில் பயணிக்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.