ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்றானது குறைந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொடர்பான ஒரு மரணம் கூட பதிவாகவில்லை என சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6 புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் கொரோனாவால் இறப்பு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை நாடு பதிவு செய்யாத 30 வது நாளாக புதன்கிழமை அமைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடைசியாக மார்ச் 7 அன்று கொரோனா வைரஸால் ஒருவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் புதன்கிழமை 215 புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை அமீரகம் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை பதிவான மிகக் குறைந்த நோய்த்தொற்று எண்ணிக்கையும் இதுவேயாகும்.
மேலும் உலகிலேயே 0.2 சதவீதம் என மிகக் குறைந்த இறப்பு விகிதங்களைக் கொண்ட நாடாகவும் அமீரகம் இருக்கின்றது.
இந்த ஆண்டு ஜனவரியில் 3,000 க்கும் அதிகமான தினசரி நோய்த்தொற்றுகள் பதிவாகி வந்த நிலையில் தற்பொழுது 300 க்கும் குறைவாகவே தொற்றுக்களின் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. நாட்டின் மாபெரும் இலவச தடுப்பூசி திட்டத்தால் 97 சதவீதத்திற்கும் அதிகமான தகுதியுள்ள குடியிருப்பாளர்கள் கொரோனா தடுப்பூசிக்கான இரண்டு டோஸ்களைப் பெற்றுள்ளதே இதற்குப் பின்னால் உள்ள முதன்மைக் காரணம் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் பூஸ்டர் டோஸ்களைப் பெறுவதால், மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்களும் குறைந்துள்ளன என்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் லேசான அறிகுறிகளுடன் இருக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
கடந்த வாரம் ஒரு மருத்துவர் கூறுகையில் கொரோனாவிற்கான அறிகுறிகள் இப்போது காய்ச்சலைப் போலவே இருப்பதாகவும், தடுப்பூசி போடப்பட்டவர்கள் மிக வேகமாக குணமடைகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
அமீரகத்தில் குறைந்துள்ள கொரோனா பாதிப்பால் அனைத்து துறைகளிலும் தொற்றுநோய்க்கு முந்தைய இயல்பு நிலைக்கு நாடு மீண்டுள்ளது. பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் 100 சதவீத திறனுடன் செயல்படுகின்றன, மேலும் மக்கள் ஒன்றாக கூடும் கூட்டங்களுக்கும் எந்த தடையும் இல்லை.
அதே போல் வெளிப்புற பகுதிகளில் முக கவசம் கட்டாயமில்லை. அத்துடன் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயணத்திற்கு முந்தைய PCR சோதனைகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.