ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் நிலவி வந்த நிலையில் அதை சற்று தணிக்கும் விதமாக இன்று (செவ்வாய்கிழமை) நாட்டின் சில பகுதிகளில் மேகமூட்டமான சூழல், மழை மற்றும் தூசிப் புயல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசி தூசியை உருவாகியதால் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமீரகத்தில் இருக்கக்கூடிய அல் அய்ன், அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் வசிப்பவர்கள் இன்று வானம் தூசி நிறைந்து காணப்பட்டதாக கூறியுள்ளனர். இந்த தூசி நிறைந்த சூழல் பார்வைக்கு இடையூறாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக சாலையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், துபாய், அல் அய்ன், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ஃபுஜைராவில் செவ்வாய் கிழமை பிற்பகலில் மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமீரகத்தில் மழை பெய்ததையடுத்து மழை பெய்த வீடியோக்களை குடியிருப்பாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் வானிலை மையமானது, இந்த வாரம் முழுவதும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.