ADVERTISEMENT

போக்குவரத்து அபராதங்களில் 35% வரை தள்ளுபடி..!! புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஷார்ஜா..!!

Published: 28 Feb 2023, 6:07 PM |
Updated: 28 Feb 2023, 6:29 PM |
Posted By: admin

ஷார்ஜாவில் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் போக்குவரத்து அபராதங்களை முன்கூட்டியே செலுத்தினால், அவர்களுக்கு விதிக்கப்படும் போக்குவரத்து அபராதத்தில் 35 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என தற்பொழுது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போது இது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி வரும் ஏப்ரல் 1, 2023 முதல் போக்குவரத்து விதிமீறலைச் செய்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அபராதத் தொகையைச் செலுத்தினால், வாகன ஓட்டிகளுக்கு 35 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியானது அபராதத் தொகை மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தது சம்பந்தமான அபராதத்திற்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட 60 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள் அபராதம் செலுத்தினால், வாகன ஓட்டிகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியானது அபராதத் தொகைக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வாகனம் பறிமுதல் சம்பந்தமான கட்டணம், ஏதேனும் இருந்தால், முழுமையாக செலுத்தப்பட வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் போக்குவரத்து விதிமீறலைச் செய்து ஓராண்டுக்குப் பிறகு செலுத்தினால் அபராதம் அல்லது கட்டணங்களில் தள்ளுபடிகள் எதுவும் பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அபுதாபியில் இதேபோன்ற திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் மூலம் அபுதாபியில் விதிக்கப்படும் போக்குவரத்து அபராதங்களை முன்கூட்டியே செலுத்தினால் அதில் தள்ளுபடி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜாவில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டமானது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, போக்குவரத்து அபராதங்களைக் கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT