குவைத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டாலும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்கள் குவைத் நாட்டிற்கு திரும்ப தடை செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து தற்பொழுது வரையிலும் குறிப்பிட்ட 32 நாடுகளில் இருக்கும் குவைத் குடியிருப்பாளர்கள் மீண்டும் குவைத் திரும்ப முடியாமல் அந்தந்த நாடுகளிலேயே இருக்கின்றனர். இந்நிலையில், இத்தடையை நீக்குவது தொடர்பான முடிவுகள் அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று குவைத் அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவையானது குவைத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக அரசு தொடர்பு மையத்தின் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முஸ்ரேம் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் நிறுவன தனிமைப்படுத்தல் தொடர்பான முடிவுகளை சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் குவைத் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குவைத் அரசாங்கம் தடை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இருக்கின்ற எந்தவொரு நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது அல்லது குறைவதை பொறுத்து அரசு அதிகாரிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளின் எண்ணிக்கையை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ முடிவெடுக்கப்படும் என்று குவைத் அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.