ADVERTISEMENT

இந்தியா, கத்தார் “ஏர் பபுள் விமான சேவை” அக்டோபர் 31 வரையிலும் நீட்டிப்பு..!! தூதரகம் தகவல்..!!

Published: 29 Aug 2020, 3:35 PM |
Updated: 29 Aug 2020, 3:48 PM |
Posted By: admin

இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே சர்வதேச விமான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக பிற நாடுகளுடன் ஏர் பபுள் (Air Bubble) எனும் ஒப்பந்தம் போடப்பட்டு அதன் மூலம் இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே சிறப்பு விமான சேவைகளை தொடங்க இரு நாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு விமான சேவைகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இம்மாத இறுதியுடன் முடியவிருந்த சிறப்பு விமான சேவைகள் அடுத்த இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஏர் பபுள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்கப்படும் விமான சேவைகள் அக்டோபர் 31 ம் தேதி வரையிலும் தொடரும் எனவும் கத்தார் நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச விமான போக்குவரத்து அக்டோபர் 31 ம் தேதிக்கு முன்னரே இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால், ஏர் பபுள் ஒப்பந்தம் இடைநிறுத்திக்கொள்ளப்படும் எனவும் தூதரகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

ஏர் பபுள் ஒப்பந்தத்தின் படி, இந்தியாவில் இருந்து கத்தார் நாட்டிற்கும் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியா மற்றும் கத்தார் நாட்டிற்கு சொந்தமான விமான நிறுவனங்களின் மூலம் விமான சேவைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து கத்தாருக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுபவர்கள்…

  • கத்தார் நாட்டு குடிமக்கள்
  • கத்தார் நாட்டின் செல்லுபடியாகும் விசாவினை வைத்திருக்கும் இந்தியர்கள் (கத்தாருக்கு மட்டுமே பயணிக்க அனுமதி).

மேலும் இந்திய பயணிகள் கத்தாருக்கு பயணிக்க வேண்டி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர், தாங்கள் வைத்திருக்கும் குறிப்பிட்ட விசா பிரிவில் கத்தாருக்குள் நுழைய இந்திய நாட்டினருக்கு பயணத் தடை இல்லை என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களில் உறுதி செய்து கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுபவர்கள்…

  • கத்தாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்
  • கத்தார் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் OCI (Overseas Citizens of India) அட்டைதாரர்கள்
  • இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழிகாட்டுதலின் கீழ் எந்தவொரு வகையிலும் இந்திய அரசு வழங்கிய செல்லுபடியாகும் விசாவை வைத்திருக்கும் கத்தார் நாட்டு குடிமக்கள்

மேலும், இரு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்கள் வலைத்தளங்கள், பயண முகவர்கள் (Agents) மற்றும் உலகளாவிய விநியோக அமைப்புகள் (global distribution systems) மூலம் இந்தியாவில் இருந்து கத்தாருக்கும் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கும் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. இருப்பினும், பயணிகள் விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய நாட்டிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுமா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் தூதரகம் அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.