ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பையொட்டி மூடப்பட்டிருந்த பள்ளிகள் அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, தற்பொழுது ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் பள்ளிகள் அனைத்தும் அறிவு மற்றும் மனித வள மேம்பாட்டு ஆணையம் (KHDA) அறிவுறுத்தியுள்ள கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிப்பதை உறுதி செய்த பின்னரே வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களாக தொலை தூரக் கல்வி பயின்று வந்த மாணவர்களுக்கு இன்று மீண்டும் திறக்கப்பட்ட வகுப்புகளானது வித்தியாசமான அனுபவங்களை கொடுத்துள்ளது. கொரோனா பரவலுக்கு பின்பு ஆரம்பிக்கப்பட்ட முதல் வகுப்புகள் என்பதால் பள்ளிகளில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதன் முதலாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் ஊழியர்களும் கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொண்ட பின்னரே பள்ளிகளுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொலைதூரக் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வராமல் தொலை தூரக் கல்வியையே தொடர்ந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தற்பொழுது திறக்கப்பட்டிருக்கும் பள்ளிகளில் கொரோனா தொற்று ஏற்படுமேயானால் அப்பள்ளி மீண்டும் மூடப்படும் என கல்வித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.