ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் குறைந்திருந்த கொரோனா வழக்குகள் தற்போது மீண்டும் திடீரென அதிகரித்து வருகிறது. நேற்றைய நாளில் மட்டும் 500 க்கும் மேல் கொரோனா வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இன்று மீண்டும் 500 க்கும் அதிகமான பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் தொடர்ந்து 5 நாட்களாக கொரோனா வழக்குகள் உயர்ந்துகொண்டே வந்ததையடுத்து அமீரக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதே நிலை தொடர்ந்தால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தது. கொரோனா தொற்று பாதிப்புகளின் அடிப்படையில் அமீரகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் தேசிய சுத்திகரிப்பு திட்டத்தை தொடங்குவது, இயக்க கட்டுப்பாட்டிற்கு தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தேவையின் அடிப்படையில் மீண்டும் செயல்படுத்தப்படலாம் என பொதுமக்களை எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று (செவ்வாய்க்கிழமை, செப்ட்ம்பர் 1, 2020) புதிதாக 574 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 70,805 ஆக உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இல்லாமல் இன்றும் 384 என்ற எண்ணிக்கையிலேயே உள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 560 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 61,491 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.