ADVERTISEMENT

UAE: குடியிருப்பாளர்கள் முன் அனுமதியின்றி அக்டோபர் 15 முதல் அமீரகம் திரும்பலாம் என அறிவிப்பு..!!

Published: 6 Oct 2020, 9:41 AM |
Updated: 6 Oct 2020, 9:44 AM |
Posted By: admin

அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பிற்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளின் மூலம் அமீரகம் திரும்பும் குடியிருப்பாளர்கள் GDRFA அல்லது ICA அனுமதி பெற்றால் மட்டுமே அமீரகம் திரும்ப அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர் ICA முன் அனுமதி பெறும் முறையை நீக்கி விட்டு தங்களின் பயண ஆவணங்களை ICA வலைதளத்தில் சரிபார்த்துக் கொண்டு அதில் கிடைக்கும் முடிவை பொறுத்து அமீரகம் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டு தற்பொழுது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், ராஸ் அல் கைமாவில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, வரும் அக்டோபர் 15 முதல் அமீரகம் திரும்பும் குடியிருப்பாளர்கள் முன் அனுமதி பெறாமல் ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையம் வழியாக அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பயண நடைமுறைகளானது ஐக்கிய அரபு அமீரகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப வந்துள்ளன என்றும் இந்த நடைமுறையின் கீழ், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுதல் மற்றும் அமீரகம் வருவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கொரோனாவிற்கான சோதனையில் எதிர்மறை முடிவை வைத்திருத்தல் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி, பயணிகள் ராஸ் அல் கைமா விமான நிலையத்தை அடைந்ததும் அங்கு மற்றொரு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த சோதனைக்கான கட்டணத்தையும், சோதனையின் முடிவில் ஒரு வேளை நேர்மறையான முடிவினைப் பெற்றால் தனிமைப்படுத்தப்படுவதற்கான கட்டணத்தையும் பயணிகள் அல்லது அவர்களின் ஸ்பான்சர்களே செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களை போன்றே அனைத்து நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் தங்களின் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல் மற்றும் அமீரகம் வருவதையொட்டி மருத்துவ காப்பீட்டைப் பெறுதல் (tourist medical insurance) போன்ற அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தால் அவர்களும் ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையம் வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்திற்கு வரவிருக்கும் சுற்றுலா பயணிகள் 96 மணி நேரத்திற்கு முன்னர் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவ விபர படிவத்தையும் (medical disclosure form) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையம் வழியாக திட்டமிடப்பட்ட விமானங்களின்படி எந்த நாட்டிற்கும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.