துபாயில் வரவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு துபாய் மெட்ரோ செயல்படும் நேரங்களில் மாற்றங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, டிசம்பர் 31 மாலை 5 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை புர்ஜ் கலீஃபா நிலையம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரெட் லைன் டிசம்பர் 31 வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் ஜனவரி 2 சனிக்கிழமை அதிகாலை 1 மணி வரை என மொத்தம் 44 மணி நேரம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, கிரீன் லைன் டிசம்பர் 31 வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் ஜனவரி 2 சனிக்கிழமை அதிகாலை 1 மணி வரை 43.5 மணி நேரம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் டிராம்கள் டிசம்பர் 31 காலை 6 மணி முதல் ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
துபாய் காவல்துறையானது மற்ற துறைகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் டவுன்டவுன் துபாயில் (Downtown Dubai) புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து பாதுகாப்பதற்கான திட்டத்தை அறிவித்ததன் காரணமாக இந்த நேர மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் காவல்துறையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி அவர்கள் கூறுகையில், பல்வேறு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுடன் பல கூட்டங்களை நடத்திய பின்னர், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதுகாக்க நிகழ்வின் பாதுகாப்புக் குழு முற்றிலும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.