சவுதி அரேபியாவின் மக்காவில் உள்ள மஸ்ஜித் அல் ஹராம் என்று அழைக்கப்படும் கிராண்ட் மசூதியின் மேல் தளத்திலிருந்து ஒருவர் குதித்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்நபர் கீழே விழுவதை தடுக்க முயன்ற ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்ததாகவும் கிராண்ட் மசூதியின் பாதுகாப்புக்கான சிறப்புப் படை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த நபரும் பாதுகாப்பு அதிகாரியும் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேவையான சட்ட நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “கிராண்ட் மசூதியின் மேல் தளத்தில் இருந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் நடந்தது” என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் “அவர் விழுந்த நேரத்தில் தரையில் மோதுவதைத் தடுக்க முயன்றபோது ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தார். தேவையான மருத்துவ சிகிச்சை பெற இருவரும் உடனடியாக மாற்றப்பட்டனர், மேலும் தேவையான அதிகாரப்பூர்வ நடைமுறைகள் முடிக்கப்பட்டன” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Special Force for the Security of the Grand Mosque responded to a critical incident after an individual threw himself from the upper floors of the Masjid al-Haram.
— The Siasat Daily (@TheSiasatDaily) December 25, 2025
During the fall, a security officer sustained injuries while heroically attempting to intercept the individual… pic.twitter.com/xFS1HvLBXQ
இந்நிலையில் கிராண்ட் மசூதியின் தலைமை இமாம் ஷேக் டாக்டர் அப்துர் ரஹ்மான் அஸ் சுதைஸ், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து, வழிபாட்டாளர்கள் விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், இடத்தின் புனிதத்தை மதிக்கவும், அதில் உள்ள முறையான இஸ்லாமிய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கவும், வழிபாடு மற்றும் கீழ்ப்படிதலில் தங்களை அர்ப்பணிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், “இஸ்லாமிய சட்டத்தின் நோக்கங்களில் உயிரைப் பாதுகாப்பதும், அதை அழிவுக்கு ஆளாக்காமல் இருப்பதும் அடங்கும், சர்வவல்லமையுள்ள அல்லாஹ் கூறியது போல் உங்கள் சொந்தக் கைகளால் உங்களை அழிவில் தள்ளாதீர்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.