துபாயின் கைட் கடற்கரையில் உள்ள விளையாட்டுத் தடங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய மோசமான சாகசங்களில் ஈடுபட்ட 90 நபர்கள் மீது துபாய் காவல்துறை நடவடிக்கை எடுத்து, அவர்களின் இ-ஸ்கூட்டர்களைப் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இத்தகைய பொறுப்பற்ற நடத்தை வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாகக் கூறிய காவல்துறை, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எந்தவித சகிப்புத்தன்மையும் காட்டப்படாது என்று வலியுறுத்தியுள்ளது. அமீரகம் முழுவதும் நிலவும் குளிர்கால வானிலை காரணமாக அதிக குடும்பங்களும் பார்வையாளர்களும் கடற்கரைக்கு வருவதால், பரபரப்பான பொது இடங்களில் சாகசம் செய்வது ஒரு தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இ-ஸ்கூட்டர்கள் மற்றும் இ-பைக்குகளைப் பயன்படுத்தும்போது போக்குவரத்து விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்த வாகனங்கள் வசதியானதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் கருதப்பட்டாலும், அவற்றின் அதிகரித்த பயன்பாடு விபத்துக்கள் மற்றும் விதிமீறல்களின் அதிகரிப்பிற்கும் வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், துபாயில் இ-ஸ்கூட்டர் தவறான பயன்பாடு மற்றும் சாலையைக் கடக்கும்போது ஏற்பட்ட சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2024 ஆம் ஆண்டில், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் மிதிவண்டிகள் சம்பந்தப்பட்ட 254 விபத்துக்கள் பதிவாகியதில் 259 பேர் காயமடைந்ததுடன் 10 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், விக்டரி ஹைட்ஸ் மற்றும் ஜுமைரா பீச் ரெசிடென்சஸ் உட்பட பல குடியிருப்பு சமூகங்கள், தொடர்ச்சியான பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாக ஏற்கனவே இ-ஸ்கூட்டர்களுக்குத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், அஜ்மான் காவல்துறையும் பொதுச் சாலைகளில் அல்லது வாகனங்களுக்கு இடையில் குழந்தைகள் மிதிவண்டிகள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பெற்றோரை எச்சரித்துள்ளது. இது கடுமையான விபத்துக்கள் மற்றும் அதிக ஆபத்தை ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அமீரகத்தில் குளிர்கால விடுமுறையால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாலும், குளிர்காலத்தில் வெளிப்புற நடவடிக்கைகள் அதிகரிப்பதாலும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்குமாறு பெற்றோர்களை அதிகாரிகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel