ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்கள் கிட்டத்தட்ட 53 நாட்களுக்குப் பிறகு, இன்று (ஜூன் 26), தங்கள் தொலைபேசிகளில் ஏவுகணை தாக்குதல்களுக்கான அவசர எச்சரிக்கை ஒலியை (siren) பெற்றனர். அத்துடன் சில வினாடிகளுக்குப் பிறகு ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையும், அதைத் தொடர்ந்து இது “தவறான ஏவுகணை எச்சரிக்கை” (false missile alert) என்ற
ஒரு விளக்கமும் வந்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறுகையில் இது ஒரு தவறான எச்சரிக்கை என்று தெளிவுபடுத்தியதுடன் , முந்தைய எச்சரிக்கையைப் புறக்கணிக்குமாறு குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டதாக தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமும் (Ncema) பின்னர் உறுதிப்படுத்தியது.
இது தொடர்பாக வெளியான செய்தியில் “தற்செயலான தொழில்நுட்பக் கோளாறு” குறித்து அந்த ஆணையமும் அது தொடர்புடைய அமைப்புகளும் மன்னிப்பு கோரின. மேலும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் வெளியிடப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டன. இப்பிரச்சனை அதிகாரிகளால் சரிசெய்யப்பட்டு கையாளப்பட்டதாகவும் ஆணையம் வலியுறுத்தியது.
ஈரான் அமீரகத்தின் மீது தாக்குதல்கள் நடத்தி வந்த காலகட்டத்தில் இது போன்ற எச்சரிக்கைகளை குடியிருப்பாளர்கள் பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று அதே எச்சரிக்கையை பெற்றதன் மூலம் மீண்டும் தாக்குதல் தொடங்கி விட்டதோ என்ற சந்தேகத்தையும் இது மக்களுக்கு தோற்றுவித்தது.
இதனையடுத்து தொழில்நுட்ப காரணத்தால் ஏற்பட்ட இந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டதுடன் “சேவையின் தொடர்ச்சியை உறுதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின்படி, இப்பிரச்சனையைக் கண்டறிந்த உடனேயே சிறப்பு குழுக்கள் தேவையான சரிசெய்தல் நடவடிக்கைகளைத் தொடங்கின,” என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.