ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையே ஐந்தாவது நாளாக போர் நீடித்து வருவதால், விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான சேவை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விசிட் விசாக்களை ஒரு மாதத்திற்கு தானாக நீட்டிப்பதாகவும், தற்போது குவைத்துக்கு வெளியே வசிப்பவர்களுக்கு கூடுதலாக மூன்று மாத கால வருகை அனுமதி (arrival permit) வழங்குவதாகவும் குவைத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஈரான் வளைகுடா நாடுகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதால் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வான்வெளி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல குடியிருப்பாளர்கள் சரியான நேரத்தில் குவைத்துக்குத் திரும்ப முடியாமல் போகலாம் என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
விசிட் விசா நீட்டிப்பு
அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தக் காலகட்டத்தில் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள அனைத்து வகையான விசிட் மற்றும் என்ட்ரி விசாக்களும் பிப்ரவரி 28 சனிக்கிழமை முதல் தானாகவே ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும். இந்த நீட்டிப்பு மின்னணு முறையில் பயன்படுத்தப்படும் என்பதும், இந்தக் காலகட்டத்தில் அனைத்து கட்டணங்களும் அபராதங்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வருகை அனுமதிகள் (arrival permit) நீட்டிப்பு
குவைத்துக்கு வெளியே வசிப்பவர்கள், அனுமதிக்கப்பட்ட வருகை அனுமதிக்கான (arrival permit) காலத்தை மீறி, நாட்டிற்குத் திரும்ப முடியாத நிலையில் இருந்தால், அவர்களுக்கு மின்னணு அமைப்பு மூலம் மூன்று மாதத்திற்கான அனுமதி தானாகவே வழங்கப்படும் என்றும், இதற்கான கட்டணங்களிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் சூழ்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்து இந்தக் காலங்கள் மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும், சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு அனைவரும் அதிகாரப்பூர்வ சேனல்களைப் பின்பற்றுமாறும் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.