அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரினால் அமீரகம் உட்பட மத்திய கிழக்கு முழுவதும் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் வெளியான அரசாங்க உத்தரவுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஈத் அல் ஃபித்ர் பண்டிகைக்கு திட்டமிடப்பட்டிருந்த வானவேடிக்கைகள் மற்றும் ட்ரோன் நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக குளோபல் வில்லேஜ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
துபாயின் பிரபலமான பன்முகக் கலாச்சார இலக்கான குளோபல் வில்லேஜ் பூங்காவானது, அதிகரித்து வரும் பிராந்திய நிலைமை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா மூடப்படும் என்று உறுதிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளின் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை காட்சிப்படுத்துவதற்கு பெயர் பெற்ற இந்த திறந்தவெளி பூங்காவானது, ஈரானுடன் தொடர்புடைய தாக்குதல்கள் பிப்ரவரி 28 அன்று தொடங்கியதிலிருந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடல்
துபாய் முழுவதும் உள்ள பல பொழுதுபோக்கு இடங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்ததால் துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் மற்றும் அய்ன் துபாய் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இத்தகைய நிலையற்ற பிராந்திய சூழ்நிலையில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவை மீண்டும் திறக்கப்படுவது குறித்த தகவல்களைப் பெற, குளோபல் வில்லேஜ் உள்ளிட்ட அதன் அதிகாரப்பூர்வத் தகவல் வழிகளைப் பார்வையாளர்கள் தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமீரகம் மீது வீசப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களைத் தடுக்க, வான் பாதுகாப்பு அமைப்புகள் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் ஈரானில் இருந்து ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 27 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொடர் தாக்குதல்களில் இதுவரை அமீரகத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 141 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel