ஐக்கிய அரபு அமீரகம் தனது சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மருத்துவப் பேராசிரியர்கள் மருத்துவப் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவதுடன், சில சுகாதாரப் பட்டதாரிகளுக்கான உரிம விதிகளும் எளிதாக்கப்பட்டுள்ளன.
அமீரகத்தின் உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம் (MoHESR) மற்றும் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) ஆகியவற்றுடன் இணைந்து, சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகமானது (MoHAP) இந்த முடிவை அறிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பேராசிரியர்கள், தங்களின் கல்விப் பணிகளுடன் மருத்துவமனைகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நடவடிக்கை, சுகாதார அமைப்புக்குள் அதிக நிபுணத்துவத்தைக் கொண்டுவரவும், கல்விக்கும் நிஜ உலக மருத்துவப் பயிற்சிக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், ஐக்கிய அரபு அமீரகம், சில சுகாதாரப் பட்டதாரிகள் தொழில்முறை உரிமம் பெறுவதற்கு முன்பு கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ஆறு மாத கால அனுபவத் தேவையையும் நீக்கியுள்ளது. இந்த விலக்கானது கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு பொருந்தும்:
- பதிவுசெய்யப்பட்ட மற்றும் உதவி செவிலியர்கள்
- மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள்
- சுவாசப் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள்
- சுகாதார உதவியாளர்கள்
இந்த நடவடிக்கை, பட்டதாரிகள் விரைவாகப் பணியில் சேரவும், தொழிலாளர் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைப்பை நவீனமயமாக்குதல்
இந்த மாற்றங்கள் அனைத்தும் உரிமம் வழங்கும் முறையின் செயல்திறனை மேம்படுத்துதல், பணியாளர் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல், நோயாளிகளுக்கான உயர் தரமான பராமரிப்பை உறுதி செய்தல் மற்றும் கல்வியை தொழில்துறையின் தேவைகளுடன் சீரமைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், பேராசிரியர்கள் தகுதி மற்றும் அனுபவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், மேலும் அவர்களின் கற்பித்தல் பொறுப்புகள் மருத்துவப் பணிகளுடன் முரண்படக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மருத்துவ பேராசிரியர்கள் மருத்துவப் பயிற்சி செய்வதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்யும் வகையில், 2017-ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எண் 20 உட்பட, முக்கிய விதிமுறைகளின் மறுஆய்வுகளைத் தொடர்ந்து இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை, அரசு அமைப்புகளுக்கு இடையேயான வலுவான ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுவதோடு, மேலும் நெகிழ்வான, நவீன மற்றும் நீடித்த சுகாதாரத் துறையை ஐக்கிய அரபு அமீரகத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளையும் பிரதிபலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel