அபுதாபியில் அமைந்துள்ள ‘ADNOC Gas’-இன் ஹப்ஷான் (Habshan) எரிவாயு தளத்தில், வான் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து அப்பகுதியில் உடைந்த பாகங்கள் விழுந்ததால் சேதம் ஏற்பட்டதாகவும், இதில் ஒரு தொழிலாளி உயிரிழந்த நிலையில், நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், எரிவாயு விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், பிற நிலையங்களிலிருந்து செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் அறிக்கையின்படி, நிலையத்தின் பாதிக்கப்பட்ட பகுதி உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டது என்றும், மேலும் ஹப்ஷான் நிலையத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான மதிப்பீடு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தால் இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் பாகங்கள் நிலையத்திற்கு அருகில் விழுந்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேதம் ஏற்பட்டபோதிலும், எரிவாயு விநியோகச் செயல்பாடுகள் சீராக இருப்பதாகவும், மற்ற நிலையங்கள் மூலம் உள்நாட்டுத் தேவை பூர்த்தி செய்யப்படுவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இது குறித்து ADNOC எரிவாயு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஃபாத்திமா அல் நுஐமி அவர்கள் பேசுகையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தனது ஆறுதல்களை தெரிவித்துள்ளார். ஊழியர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வுமே நிறுவனத்தின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தொடர்ந்து நடைபெற்று வரும் பிராந்திய நிகழ்வுகளுக்கு மத்தியிலும் நிறுவனம் தனது மீள்திறனை வெளிப்படுத்தி, நிதி ரீதியாக வலுவாகவும் பங்குதாரர்களுக்கு மதிப்பை வழங்குவதில் உறுதியாகவும் உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மார்ச் மாதத்தில், அதன் சில வளாகங்களுக்கு அருகே இதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்ததாக நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் எந்தக் காயங்களோ அல்லது செயல்பாட்டுப் பாதிப்புகளோ பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel