ADVERTISEMENT

அமெரிக்கா, ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தத்தில் யாருக்கு லாபம்..??

Published: 8 Apr 2026, 11:27 AM |
Updated: 8 Apr 2026, 12:45 PM |
Posted By: Menaka

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கும் கடைசி நேர முயற்சியாக, பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, வாஷிங்டன் இராணுவத் தாக்குதல்களை நிறுத்தி வைக்கும், அதே நேரத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கான முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான போக்குவரத்தை தெஹ்ரான் தற்காலிகமாக அனுமதிக்கும் என்று உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை ஒரு “முழுமையான வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டதாகக் கூறிய ட்ரம்ப், இந்த இடைநிறுத்தம் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்றும், தெஹ்ரானின் ஒரு முன்மொழிவு பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஈரான் தரப்பில் தாக்குதலை நிறுத்தினால் நீரிணை திறக்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக ஈரானும் போர்நிறுத்ததை ஏற்றுக்கொண்டதாக அறிவித்து இது ஈரானுக்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளது. இதனையடுத்து, அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஈரானிய இராணுவ நிர்வாகத்தின் கீழ் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க அனுமதிக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்புகள் வந்துள்ளன.

ADVERTISEMENT

மேலும் இரு தரப்புகளுக்கு இடையே நீண்டகாலத் தீர்வுவை எட்டுவதற்காக, தடைகளை நீக்குதல், தனது அணுசக்தித் திட்டத்தை அங்கீகரித்தல், ஹோர்முஸ் நீரிணை மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடு மற்றும் எதிர்காலத் தாக்குதல்களுக்கு எதிரான உத்தரவாதங்கள் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கிய 10 அம்ச கோரிக்கைகளை தெஹ்ரான் முன்வைத்துள்ளது.

நீண்ட நாட்களாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைக்கான நீக்கம், ஹோர்முஸ் நீரிணைக்கான கட்டுப்பாடு, பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ தளத்தை வெளியேற்றுதல் உள்ளிட்ட அதன் கோரிக்கைகள் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்டு விட்டால் மத்திய கிழக்கிலேயே ஆதிக்கம் செலுத்தும் நாடாக ஈரான் உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இருப்பினும், இந்தப் பிரச்சினைகளில் இரு தரப்பினருக்கும் இடையே முக்கிய வேறுபாடுகள் நீடிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. அதுமட்டுமில்லாமல், ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்துவதற்கான அமெரிக்காவின் முடிவை ஆதரிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, ஆனால் ஹிஸ்புல்லாவுடனான பதற்றம் தொடரும் லெபனானுக்கு இந்த போர் நிறுத்தம் பொருந்தாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், வருகின்ற வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தானின் மத்தியஸ்த ஆதரவுடன், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி ஒப்பந்தம் எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த விவாதங்கள் ஒரு பரந்த மற்றும் நிரந்தரமான உடன்படிக்கையை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவதால் விநியோகக் கவலைகள் தணியும் என்று எதிர்பார்க்கப்படுவதால், எண்ணெய் விலைகள் சரிந்து, இந்த அறிவிப்பு ஏற்கனவே உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel