துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையமானது (KHDA), ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே கட்டமைக்கப்பட்ட, KHDA மையத்தால் வழிநடத்தப்படும் கல்வி கற்றலை வழங்க அனுமதிக்கும் இரண்டு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘CLHL Hubs’ மற்றும் ‘CLHL Educators’ ஆகிய இந்தச் சேவைகள், அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்ட தொலைதூரக் கற்றல் காலங்களில் கல்வியின் தொடர்ச்சியை உறுதி செய்வதோடு, கடுமையான தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளையும் பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த சேவைகள் கட்டாய ஆன்லைன் வழிக் கற்றல் காலங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும், மற்ற நேரங்களில் வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
CLHL ஹப்ஸ் என்பது, அங்கீகரிக்கப்பட்ட வீடுகளில், மையப் பணியாளர்களின் மேற்பார்வையில் எட்டு குழந்தைகள் வரை கொண்ட சிறிய, மழலையர் பள்ளி பாணியிலான குழுக்களாகச் செயல்படும். CLHL எஜுகேட்டர்ஸ், தகுதிவாய்ந்த, KHDA-வில் பதிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களின் தலைமையில், ஒருவருக்கு ஒருவர் அல்லது உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என வீட்டிலேயே தனிப்பயனாக்கப்பட்ட அமர்வுகளை வழங்கும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
KHDA-வின் கூற்றுப்படி, இந்த முயற்சி குடும்பங்களுக்கு மிகவும் நெகிழ்வான கற்றல் விருப்பங்களை வழங்குவதோடு, கல்வி கற்றலில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் துபாயின் திறனையும் வலுப்படுத்துகிறது. அதேசமயம், இந்தச் சேவைகள், உரிமம் வழங்குதல், இடர் மதிப்பீடுகள், பெற்றோர் ஒப்பந்தங்கள், குழந்தை பாதுகாப்பு, பணியாளர் பதிவுகள், மேற்பார்வை மற்றும் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான கட்டமைப்பைப் பின்பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தடையற்ற கற்றலை உறுதி செய்தல், குழந்தைகளின் நல்வாழ்வைப் பாதுகாத்தல் மற்றும் குடும்பங்களுடன் நம்பிக்கையை வளர்த்தல் ஆகிய மூன்று முக்கிய முன்னுரிமைகளை இந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்தக் கட்டமைப்பின் கீழ், கற்பிப்பதன் தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளைப் பராமரிப்பதற்கு மையங்கள் முழுப் பொறுப்புடன் இருக்கும் என்பதையும் KHDA வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel