ADVERTISEMENT

27 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட உள்ள துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப்!!

Published: 15 Apr 2026, 6:12 PM |
Updated: 15 Apr 2026, 6:12 PM |
Posted By: Menaka

துபாயின் வானுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றாகத் திகழும் ஜுமைரா புர்ஜ் அல் அரப், 1999-ல் திறக்கப்பட்டதிலிருந்து தனது முதல் பெரிய புனரமைப்புப் பணிகளுக்காக 18 மாதங்களுக்கு மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதன் புகழ்பெற்ற வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.

ADVERTISEMENT

துபாய் ஹோல்டிங்கின் துணை நிறுவனமான ஜுமைரா குழுமத்தால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட சொகுசுத் தலங்களில் ஒன்றாக இதை மாற்றிய அதன் தனித்துவமான தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஹோட்டலின் உட்புறங்களை கவனமாகப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ‘ஏழு நட்சத்திர’ ஹோட்டல் என்று விவரிக்கப்படும், பாய்மர வடிவிலான இந்தக் கட்டிடம் நீண்ட காலமாக துபாயின் வானுயரக் காட்சியையும் உலகளாவிய பிம்பத்தையும் வரையறுத்து வருகிறது.

மேலும், இந்தப் புனரமைப்புப் பணிகளுக்கு பாரிஸை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற உட்புறக் கட்டிடக் கலைஞர் டிரிஸ்டன் ஆவர் (Tristan Auer) தலைமை தாங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜுமைராவின் கூற்றுப்படி, அவரது அணுகுமுறை ஒரு கலைப்படைப்பின் புனரமைப்பைப் போலவே இருக்கும், அதன் சாராம்சத்தை மாற்றாமல் அதை மேம்படுத்தும்.

ADVERTISEMENT

புர்ஜ் அல் அரப் ஹோட்டலின் வரலாறு

புர்ஜ் அல் அரப் ஹோட்டலின் கட்டுமானம் 1994-ல் ஒரு செயற்கைத் தீவில் தொடங்கியது. கடல் சீற்றங்களைத் தாங்கும் வகையில் இதன் அடித்தளம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. கட்டிடக் கலைஞர் டாம் ரைட்டால் வடிவமைக்கப்பட்ட, 321 மீட்டர் உயரமுள்ள இந்தக் கட்டிடம், அரேபிய வளைகுடாவிலிருந்து எழும் ஒரு தோணியின் பாய்மரத்தைப் போலக் காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

1998-ஆம் ஆண்டளவில், அதன் பாய்மர வடிவக் கட்டமைப்பு துபாயின் கடற்கரையோரம் வியத்தகு முறையில் உயரத் தொடங்கியது. கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே இது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

ADVERTISEMENT

ஐந்து ஆண்டுகால நுணுக்கமான பணிக்குப் பிறகு, இந்த ஹோட்டல் டிசம்பர் 1, 1999 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டு, விரைவில் ஆடம்பரம் மற்றும் லட்சியத்தின் உலகளாவிய சின்னமாகவும் மாறியது.

இந்த ஹோட்டலின் உட்புற வடிவமைப்பு அதன் ஆடம்பரத்திற்காகப் பெயர் பெற்றது. இதில் பளிங்குக் கற்களால் ஆன உட்புறங்கள், தங்க இலை வேலைப்பாடுகள் மற்றும் சுமார் 450 கிலோ எடையுள்ள 210 படிகக் குழாய்களால் ஆன ஒரு பிரமிக்க வைக்கும் சுழல் சரவிளக்கு இடம்பெற்றுள்ளன. அனைத்து அறைகளும் சூட் வகையைச் சேர்ந்த இந்த ஹோட்டல், பல ஆண்டுகளாக அரச குடும்பத்தினர், பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களை உபசரித்து, உலகின் மிகவும் பிரத்தியேகமான ஹோட்டல்களில் ஒன்றாகத் தனது நற்பெயரை நிலைநிறுத்தியுள்ளது.

புர்ஜ் அல் அரப், புத்தாண்டு கொண்டாட்டங்களின் கண்கவர் காட்சிகள் முதல் 2024-ல் சாதனை படைத்த ட்ரோன் நிகழ்ச்சிகள் வரை, மறக்க முடியாத உலகளாவிய தருணங்களையும் வழங்கியுள்ளது. அதன் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக, 2005-ல் ரோஜர் ஃபெடரருக்கும் ஆண்ட்ரே அகஸ்ஸிக்கும் இடையே ஹெலிபேடில் நடந்த டென்னிஸ் போட்டி இன்றும் சிறந்து விளங்குகிறது.

எதிர்காலத்திற்காகப் பாதுகாக்கப்பட்ட ஒரு பாரம்பரியம்

இது குறித்து ஜுமேராவின் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் பி. மேயர் கூறுகையில், இந்தப் புனரமைப்பை ஒரு மைல்கல் தருணம் என்று விவரித்துள்ளார். இது, அந்த நிறுவனம் தனது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, ஆடம்பர விருந்தோம்பலில் உலகத் தரத்தைத் தொடர்ந்து நிலைநாட்டுவதையும் உறுதி செய்கிறது.

கட்டம் கட்டமாக நடைபெறும் இந்த மறுசீரமைப்பு, அதன் அடையாளச் சின்னமாக விளங்கக் காரணமான வடிவமைப்பில் எந்த சமரசமும் செய்யாமல், உட்புறங்களை மேம்படுத்துதல், அனுபவங்களைத் தரம் உயர்த்துதல் மற்றும் வருங்கால சந்ததியினருக்காக அந்த ஹோட்டலின் தனித்துவமான அடையாளத்தைப் பேணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஜுமேரா குழுமம் தெரிவித்துள்ளது.

புதிய அடையாளச் சின்னங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் துபாய் தொடர்ந்து பரிணமித்து வரும் நிலையில், இன்றும் புர்ஜ் அல் அரப் அந்நகரின் துணிச்சலான தொலைநோக்குப் பார்வையின் சின்னமாகத் திகழ்கிறது. தற்போது அதன் பாரம்பரியத்தை எதிர்காலத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் கவனமாகப் புனரமைக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel