ஆசியக்கோப்பை 2020 – துபாயில் இந்திய, பாகிஸ்தான் அணிகள்!!
கிரிக்கெட் ரசிகர்களின் ஒரு முக்கிய நிகழ்வாக ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி (Asia Cup) கருதப்படுகின்றது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டியில் ஆசியாவில் உள்ள நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற பல்வேறு நாடுகள் பங்கேற்கும்.
இந்த வருடத்திற்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி முதலில் பாகிஸ்தானில் நடைபெற முடிவெடுத்திருந்த நிலையில், தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த BCCI (Board Of Control for Cricket in India) இன் தலைவரான சவுரவ் கங்குலி, இந்த வருட ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
முன்னதாக இப்போட்டிகள் பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் நடக்க முடிவு செய்த நிலையில், இந்திய அணி அங்கு சென்று விளையாட மறுப்பு சொல்லவில்லை. ஆனால் தற்பொழுது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் அரசியல் காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என்று மறுத்துள்ளது. எனவே, இந்த வருடப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அங்கு நடைபெறும் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பங்கேற்கும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2018 ம் ஆண்டு ஆசியக்கோப்பையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது என்பது நினைவு கூறத்தக்கது.