இராமநாதபுரத்தில் புதிய மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா!!! முதல்வர் வருகை!!!
தமிழகத்தின் தென்கோடியே அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் “எடப்பாடி கே பழனிசாமி” அவர்களால் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அங்கு முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை மாநிலத்திற்கு கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்த முதல்வரின் இமாலய சாதனை இது, என்று கூறினார்.
இந்த மருத்துவ கல்லூரிகளானது இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாகப்பட்டினம் உட்பட 11 மாவட்டங்களில் அமையவுள்ளது. இதில் முதல் கட்டமாக இராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் வரும் மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் அவர்களால் அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பயனடைவதுடன், நீண்ட காலமாக இந்திய நாட்டில் அரசே நடத்தும் அதிநவீன மருத்துவ கல்லூரிகளை கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை கூறினார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள “அண்ணா பூங்கா” அருகே ஆறு மாடிகளைக் கொண்டு கட்டப்பட இருக்கும் இந்த மருத்துவ கல்லூரி கட்டிட பணியானது, இப்போதிலிருந்து தொடங்கி 11 மாதங்களில் நிறைவடையும் என்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார். மேலும் தமிழக முதல்வர் இத்திட்டத்திற்காக ஒரு பெரிய தொகையை ஒதுக்கியுள்ளதால் நிதி பற்றிய கவலை இல்லை என்றும் கூறினார். அண்மையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக 3,000 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனை விரைவாக கட்டிமுடிக்கப்பட்டு, முதல் மாணவர் சேர்க்கை வரும் 2021 கல்வியாண்டு முதல் தொடங்கும் என்றும் அதில் 150 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருப்பதாகவும் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். மேலும் ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், இங்கு 300 மருத்துவ நிபுணர்களையும் 900 பாரா மருத்துவ ஊழியர்களையும் முதல் கட்டமாக இங்கு கொண்டு வர அரசு முன்மொழிந்ததாகவும், இம்மருத்துவமனைகள் 750 படுக்கைகள் கொண்டதாகவும் இருக்கும் எனவும் கூறினார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇதன் மூலம், இங்கு மருத்துவ கல்லூரி அமைவதற்கான இம்மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையானது ஒரு வழியாக நிறைவேறுவதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் குறிப்பாக கிராம புரங்கள் அதிகம் கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் பள்ளி கல்வி தேர்ச்சி சதவிகிதம் ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இராமநாதபுரம் மாவட்டம் தேர்ச்சி சதவிகிதத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சருடன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கே.வீரா ராகவா ராவ், மருத்துவ கல்லூரி டீன் எம். அல்லி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மற்றும் வருவாய் மற்றும் சுகாதார துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.