கொரோனா வைரஸ் : 1,25,000 மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட அமீரகம்…!!!! சுகாதார அமைச்சகம் அறிவிப்பு…!!!
கொரோனா வைரஸைக் கண்டறிவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை 1,25,000 சோதனைகள் நடத்தியுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) தெரிவித்துள்ளது.
உலகிலேயே ஐக்கிய அரபு அமீரகத்தின் மருத்துவப் பரிசோதனைத் திறனானது மிகச் சிறந்தது என்று சுகாதார அமைச்சகம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஒரு மில்லியனுக்கு கிட்டத்தட்ட 13,000 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமீரக விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான அதிகாரிகள் ஊடுருவாத வெப்ப பரிசோதனை (Non-intrusive Thermal Screening) போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதிக நோய்தொற்று வீதம் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இரண்டு முறை பரிசோதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகம் மற்றும் துபாய் சுகாதார ஆணையத்தின் சுகாதார ஊழியர்களும் கையில் வைத்திருக்கும் தெர்மோமீட்டரை பயன்படுத்தி தனிநபர்கள் மீது விரைவான வெப்பநிலை சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To date the UAE has performed over 125,000 test. The UAE’s testing coverage is the highest in the world, with almost 13,000 people tested per million#coronavirus#covid19@mohapuae pic.twitter.com/UZ5a4NtnlC
— هيئة الصحة بدبي (@DHA_Dubai) March 16, 2020
DHA, சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) மற்றும் பிற அதிகாரிகளுடன் சேர்ந்து, அதிகளவிலான கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையங்களில் மேம்பட்ட சுகாதார சோதனைகளை மேற்கொள்கிறது. இது அவர்களின் பயண நேரத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை கூடுதலாக அதிகரிக்கச்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக உடல் வெப்பநிலையுடன் காணப்படுபவர்கள் அதற்கடுத்த கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோதனை முடிவு வரும் வரை கண்காணிக்கப்படுவார்கள்.
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய விரும்பும் நபர்கள், சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் எண் 800111 ஐ அழைக்கலாம் அல்லது மருத்துவ செயல்பாட்டு கட்டளை மையம் 8001717 அல்லது துபாய் சுகாதார ஆணையம் (DHA) எண் 800342 ஐ அழைத்து தகவல்கள் பெறலாம். மேற்கூறிய அனைத்து தொலைபேசி எண்களும் கட்டணமில்லா சேவையை வழங்குகிறது.
இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 26 பேர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் தரமான சிகிச்சைக்கு ஒரு சான்றாக விளங்குகிறது.