தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தொடக்கம்!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க உள்ளது. தேர்வானது நாளை தொடங்கி மார்ச் 24 ம் தேதி வரை நடைபெறும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,276 பள்ளிகளில் மொத்தமாக 8,16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 8 லட்சத்து 1,401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர். புதுச்சேரியில் மட்டும் 14,958 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது.
3,012 தேர்வு மையங்களில் தேவையான தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் தேர்வு பிற்பகல் 1.15 வரை நடைபெறும். மூன்று மணி நேரத்துடன் கூடுதலாக 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பது போன்றவற்றிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது அறை கண்காணிப்பாளர் பணியில் 42,000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
நாளை தொடங்கும் தேர்வு, மார்ச் 24-ம் தேதி முடிவடைகிறது. மேலும், தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒட்டி முறைகேடுகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 4 ,000 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆள் மாறாட்டம் செய்தால் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், காப்பி அடித்தல், விடைத்தாளை மாற்றி எழுதுதல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை தேர்வு கூடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.