தமிழ்நாட்டில் கடலில் வீசப்பட்ட 7 கோடி மதிப்பிலான தங்கம்… கடலோர காவற்படையினர் பறிமுதல்!!
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்திக் கொண்டு வரப்படும் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை அங்குள்ள மன்னார் வளைகுடா தீவில் புதைத்து வைக்கும் புதிய யுக்தியை தற்பொழுது கடத்தல்காரரர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
ராமேஸ்வரத்திற்கு படகு மூலம் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஹோவர் கிராப்ட் கப்பலில் நேற்று முன்தினம் இரவில் இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இணைந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு படகையும் அதில் இருந்த ஆசிக், பாரூக் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், இலங்கையில் இருந்து தங்கத்தைக் கடத்திக் கொண்டு வந்து கடலோரக் காவல்படையின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பதற்காக மன்னார் வளைகுடா பகுதியில் வீசிவிட்டு GPS அடையாளத்தையும் வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து நேற்று காலை மண்டபத்தில் இருந்து மீண்டும் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினரும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினரும் தங்கத்தை வீசியதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று, நீச்சல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற இந்திய கடலோர காவல்படையினரின் உதவியுடன் அங்கு வீசப்பட்டிருந்த 14 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6 முதல் 7 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 5 வருடத்துக்கு பிறகு ராமேசுவரம் பகுதியில் இவ்வளவு அதிகமான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். முன்னதாக, பாம்பன் ரயில் நிலையத்தில் கடலோர போலீசார் 33 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். அதன் பின் தற்போது 14 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.